கணவர் இரண்டாவது திருமணம் போலீசில் காதல் மனைவி புகார்
கணவர் இரண்டாவது திருமணம் போலீசில் காதல் மனைவி புகார்
UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 07:28 PM

ஹென்னுார்: காதல் மனைவியை கைவிட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்தவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ஹென்னுாரை சேர்ந்தவர் முகமது சகாகத் அலி, 35. இவர், வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, ஐந்து ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சிறப்பு திருமணம் என்று தனது திருமணத்தை, சார் -– பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். ஆனாலும் தனக்கு திருமணம் நடந்தது பற்றி குடும்பத்தினரிடம், முகமது கூறவில்லை. கல்யாண்நகரில் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக முகமது சரியாக வீட்டிற்கு வரவில்லை. இதுபற்றி அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமதுவிடம் கேட்ட போது அவரிடம் சரியான பதில் இல்லை.
இதனால் தனது நண்பர்கள் மூலம், முகமது பற்றி அவரது மனைவி விசாரித்த போது, இரண்டு மாதங்களுக்கு முன் முகமது இன்னொரு பெண்ணை திருமணம் செய்தது தெரிந்தது.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருப்பதும், முதல் கணவரை பிரிந்து வாழ்வதும் தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த முகமதுவின் மனைவி, அவர் மீது ஹென்னுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.
