கணவரை கொலை செய்து மாரடைப்பு நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் கைது
கணவரை கொலை செய்து மாரடைப்பு நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் கைது
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 08:46 PM

எலக்ட்ரானிக் சிட்டி: கள்ளக்காதலருடன் சேர்ந்து, கணவரை கொலை செய்து மாரடைப்பால் இறந்ததாக கதை கட்டிய மனைவியும், கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின், தொட்ட தோகூரில் வசித்தவர் உபேந்திரா, 40. இவரது மனைவி அனிதா, 35. தம்பதி, கடன் தேவைப்படுவோருக்கு, கடன் வாங்கி கொடுக்கும் தொழில் செய்கின்றனர்.
இதற்காக அலுவலகம் வைத்துள்ளனர். அக்டோபர் 12ம் தேதியன்று அதிகாலை, உபேந்திரா திடீரென இறந்தார்.
கணவர் கழிப்பறைக்கு செல்லும் போது, தவறி கீழே விழுந்ததில், மாரடைப்பால் இறந்ததாக அக்கம், பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் அனிதா கூறினார். இறுதி சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார்.
ஆனால் உபேந்திராவின் சகோதரருக்கு, சந்தேகம் ஏற்பட்டது. எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரும் அங்கு வந்து உபேந்திராவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அறிக்கையில் உபேந்திரா மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரிந்தது. அதன்பின் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சம்பவம் நடந்த நாளன்று, அடையாளம் தெரியாத நபர், அனிதாவின் வீட்டுக்கு வந்தது தெரிந்தது. அந்நபர் மதுசூதன், 41, என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை விசாரித்த போது, கொலை ரகசியம் அம்பலமானது.
வாடகைக்கார் ஓட்டுநரான மதுசூதனுக்கும், அனிதாவுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.
இதையறிந்து உபேந்திரா மனைவியை திட்டி கண்டித்தார். அக்டோபர் 11ம் தேதியன்றும், வாக்குவாதம் நடந்தது.
எனவே மறுநாள் அதிகாலை, மதுசூதனை அனிதா தன் வீட்டுக்கு வரவழைத்தார்.
இருவரும் சேர்ந்து உபேந்திராவை கழுத்தை நெரித்தும், மூக்கு, வாயை அழுத்தியும் கொலை செய்தது, விசாரணையில் தெரிந்தது. அனிதாவும், மதுசூதனும் கைது செய்யப்பட்டனர்.
