மாணவர்களை தாக்க முயன்ற காட்டு யானை; மக்கள் போராட்டம்
மாணவர்களை தாக்க முயன்ற காட்டு யானை; மக்கள் போராட்டம்
ADDED : ஆக 13, 2026 12:07 AM
சிக்கமகளூரு: பள்ளி பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களை, காட்டு யானை தாக்க முயற்சித்தது. அவர்கள் அங்கிருந்து வேகமாக ஓடியதால், உயிர் தப்பினர்.
சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், குப்பிகா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சித்தனகொடகே காலனியில், நேற்று காலை ஆறு மாணவர்கள் வீட்டு அருகில் உள்ள பிரதான சாலையில் பள்ளி பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது, அங்கு திடீரென வந்த ஒற்றை காட்டு யானை, மாணவர்களை தாக்க வந்தது. யானையை கண்டு பீதியடைந்த மாணவர்கள், புத்தக பையை அங்கேயே வீசி விட்டு, வேகமாக வீட்டுக்கு ஓடிவிட்டனர்.
சிறிது துாரம் விரட்டிய பின், அங்கிருந்த தோட்டத்தில் புகுந்து, யானை மறைந்தது. மாணவர்களை யானை தாக்க வந்த தகவல், காட்டுத்தீ போன்று பரவியது.
கிராமத்தினர் கோபமடைந்து யானையை விரட்ட, கூட்டமாக வந்தனர். அதற்குள் யானை தோட்டத்தில் மறைந்தது.
கடந்த ஆறு மாதங்களாகவே, அரளிகொப்பா, வாகடே, சங்க்சே, குப்பிகா கிராமங்களில் ஒற்றை காட்டு யானை அச்சுறுத்தல் உள்ளது.
பாக்கு, வாழை, தென்னை மரங்களை துவம்சம் செய்து, நெல் வயலை சேதப்படுத்தி உள்ளன.
வனத்துறையினரும் பட்டாசு வெடித்து, யானையை வனத்துக்குள் விரட்டுகின்றனர். எனினும் அந்த யானை மீண்டும் கிராமங்களில் நுழைகிறது.
நேற்றும் பள்ளி மாணவர்களை, காட்டு யானை தாக்க முயற்சித்ததை அறிந்து, கோபமடைந்த கிராமத்தினர் சிக்ககிரஹாவில் உள்ள வனத்துறை அதிகாரிகளின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணும்படி வலியுறுத்தினர். அதிகாரிகளும் யானையை பிடிக்க, உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.
