மழைக்காலத்தில் ரசிக்க தகுந்த வனவிலங்குகள், சரணாலங்கள்
மழைக்காலத்தில் ரசிக்க தகுந்த வனவிலங்குகள், சரணாலங்கள்
UPDATED : அக் 08, 2026 12:15 AM
ADDED : அக் 07, 2026 08:54 PM

- நமது நிருபர் -: கர்நாடகாவில் பரவலாக மழை பெய்கிறது. வனப்பகுதிகள் பசுமையாக கண்களை கொள்ளை கொள்கின்றன. இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்க, மாநிலத்தில் வன விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரை கை வீசி அழைக்கின்றன.
தலக்காவிரி சரணாலயம்
குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி, காவிரி ஆற்றின் பிறப்பிடமாகும். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். இது வனவிலங்குகள் சரணாலயமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, யானை உட்பட, பல்வேறு விலங்குகள் உள்ளன. மழைக்காலத்தில் இப்பகுதியின் இயற்கை, பல மடங்கு அதிகரிக்கும். காண்போரை மனம் மகிழ வைக்கிறது. இங்குள்ள அடர்ந்த பசுமையான வனங்கள், பனி படர்ந்த மலைகள், அமைதியான சூழ்நிலை, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. பறவைகள், விலங்குகளை பார்க்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
பத்ரா சரணாலயம்
சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவில், பத்ரா வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இது அமைதியும், இயற்கை அழகு கொஞ்சும் அற்புதமான சுற்றுலா தலமாகும். மழைக்காலத்தில் இங்கு நீர் வீழ்ச்சிகளை பார்ப்பது, இனிமையான அனுபவம்.
பத்ரா வன விலங்குகள் சரணாலயத்திலும், வன விலங்குகள் ஏராளம். 'சபாரி' சென்றால் விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை காணலாம். இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம். இதுவும் மிகவும் பிரசித்தி பெற்றது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
கர்நாடகாவில் தலக்காவிரி, பத்ரா வன விலங்குகள் சரணாலயங்கள் மட்டுமின்றி, நாகரஹொளே, பண்டிப்பூர் உட்பட, பல்வேறு வன விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன.
பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு ஒதுங்கி, அமைதியான சூழ்நிலையில் பொழுது போக்க விரும்பினால், வன விலங்குகள் சரணாலயத்துக்கு வரலாம். சரணாலயங்களில் அரசு சார்ந்த விடுதிகள், தனியார் ரிசார்ட்டுகள் உள்ளன. இங்கு தங்குவதற்கு பிரச்னை இல்லை.
தசரா விடுமுறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த வன விலங்குகள் சரணாலயத்தை பார்க்க தவறாதீர்கள்.
