/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளைஞர்களை கவர திட்டம் நிகில் குமாரசாமி வியூகம் எடுபடுமா?
/
இளைஞர்களை கவர திட்டம் நிகில் குமாரசாமி வியூகம் எடுபடுமா?
இளைஞர்களை கவர திட்டம் நிகில் குமாரசாமி வியூகம் எடுபடுமா?
இளைஞர்களை கவர திட்டம் நிகில் குமாரசாமி வியூகம் எடுபடுமா?
ADDED : ஆக 06, 2025 08:56 AM

கர்நாடகாவில் ம.ஜ.த.,வின், 'பவர்' நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதை புள்ளி விபரங்களும் உணர்த்துகின்றன. 2018 சட்டசபை தேர்தலில் கட்சியின் ஓட்டு வங்கி, 19 சதவீதமாக இருந்தது. இது, 2023 சட்டசபை தேர்தலில் 13 சதவீதமாக குறைந்தது. இதை சரி செய்ய, கட்சி தரப்பில் பல முயற்சிகள் எடுத்தாலும், எதுவும் பலனளித்ததாக தெரியவில்லை.
இந்த நிலையை மாற்ற, ம.ஜ.த.,வின் அடுத்த தலைமுறை தலைவரான நிகிலுக்கு இம்முறை பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுதும், 'மக்களுடன் ஜனதா தளம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் போது, இளைஞர்களை கட்சிக்கு ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி தருவது, விளையாட்டு மைதானங்கள் அமைப்பது என செய்வதால் இளைஞர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என மனக்கணக்கு போட்டு உள்ளார்.
முதல் பயணம் இதுவரை முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பல சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முதல் முறையாக நிகில் தலைமையில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, மக்கள் கூட்டத்தையும் பார்க்க முடிகிறது. இதை பயன்படுத்தி, அவரும் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறார். மொத்தம், 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதாக இலக்கு நிர்ணியித்து உள்ளார். இதற்காக குறிப்பிட்ட மொபைல் போன் நம்பருக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தால், கட்சியில் இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவித்து உள்ளார்.
இது உறுப்பினர் சேர்க்கையை சுலபமாக்கி உள்ளது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து, கட்சி தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை குறைக்க பார்க்கிறார். இதுவும், 'ஒர்க் அவுட்' ஆகி உள்ளது.
பேச்சு திறமை முக்கியமாக மாண்டியா, பழைய மைசூரு போன்ற செல்வாக்குமிக்க பகுதிகளை தங்கள் வசம் மீட்டெடுக்கவும் திட்டமிட்டு உள்ளார். இந்த பயணத்தின் போது, நிகில் தனது பேச்சு திறமையை வளர்த்து வருகிறார். துவக்கத்தில் மைக்கில் பேச சிரமப்பட்டவர், தற்போது எப்போது பேச்சை முடிப்பார் என்ற அளவுக்கு வந்து விட்டார். ஒரு அரசியல்வாதிக்கான பேச்சாற்றலை பெற்று விட்டார் என்றே சொல்லலாம். ஆனால், இது எந்த அளவு ஓட்டு வங்கியாக மாறும் என தெரியவில்லை.
தற்போது ம.ஜ.த.,வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் தன் பெரியப்பா மகன் பிரஜ்வல் விவகாரத்தால், என்ன நிகழும் என கருத முடியாத நிலையும் உள்ளது.
மொத்தத்தில் இத்தனை தடைகளை மீறி நிகில் வெற்றி பெறுவாரா, கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவாரா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
- நமது நிருபர் -