/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொதித்து எழுந்த காங் - எம்.எல்.ஏ.,க்கள் சித்தராமையா அரசு தாக்கு பிடிக்குமா?
/
கொதித்து எழுந்த காங் - எம்.எல்.ஏ.,க்கள் சித்தராமையா அரசு தாக்கு பிடிக்குமா?
கொதித்து எழுந்த காங் - எம்.எல்.ஏ.,க்கள் சித்தராமையா அரசு தாக்கு பிடிக்குமா?
கொதித்து எழுந்த காங் - எம்.எல்.ஏ.,க்கள் சித்தராமையா அரசு தாக்கு பிடிக்குமா?
ADDED : ஜூன் 25, 2025 08:37 AM

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 113 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், கூடுதலாக இரண்டு இடங்களில் வென்றனர்.
மூன்று சுயேச்சைகள் ஆதரவும் காங்கிரசுக்கு உள்ளது. இதனால் 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது; அரசு பத்திரமாக உள்ளது என்று, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூறி வருகின்றனர்.
பெருமை பேச்சு
கர்நாடக அரசியலில் தற்போது எழுந்துள்ள புயலை பார்த்தால், சித்தராமையா அரசு இன்னும் மூன்று ஆண்டுகள் தாக்கு பிடிக்குமா என்ற கேள்வி எழ ஆரம்பித்து உள்ளது.
வாக்குறுதி திட்டங்களால் தங்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று, அரசு மீது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதலில் குற்றச்சாட்டு கூறி வந்தனர். ஆனால் வாக்குறுதி திட்டங்களை பற்றி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பெருமையாக பேசி வந்தனர். ஆனால் வாக்குறுதி திட்டங்களால் தங்கள் கையிலும் சூடு விழுந்துள்ளதை உணர்ந்துள்ள, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் இப்போது அரசுக்கு எதிராக பகிரங்கமாக பேச ஆரம்பித்து உள்ளனர்.
வளர்ச்சி பணிகள் நடக்காததால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு செல்லும்போது, மக்கள் சுற்றி வளைத்து கேள்வி கேட்க ஆரம்பித்து உள்ளனர். இதற்கு எம்.எல்.ஏ.,க்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் தொகுதி பக்கம் செல்வதை தவிர்த்து வீட்டிற்குள் இருக்கின்றனர்.
திரைமறைவு
இன்னொரு பக்கம் அமைச்சர்கள் - ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இடையிலான மோதல், உச்சகட்டத்தை எட்டி உள்ளது. குறிப்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு, சரியாக வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
சில அமைச்சர்கள் தங்கள் பதவி காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சம்பாதித்து விட வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளனர் என்றும், எம்.எல்.ஏ.,க்கள் நினைக்க ஆரம்பித்து உள்ளனர். அரசில் எவ்வளவோ ஓட்டைகள் இருந்தாலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முட்டு கொடுத்து வந்தனர்.
ஆனால் தற்போது மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.பாட்டீல், பசவராஜ் ராயரெட்டி, தேஷ்பாண்டே, யஷ்வந்த்ராயகவுடா பாட்டீல், கோபாலகிருஷ்ணா, ராஜு காகே ஆகியோர் அரசை பகிரங்கமாக விமர்சித்து உள்ளனர். அரசின் பல துறைகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் கூற ஆரம்பித்து உள்ளனர்.
தொகுதிக்கு நிதி கிடைக்காமல், தங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்காமல் இருப்பதால், அதிருப்தியில் இருக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., திரைமறைவில் முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி அரசு
ராஜு காகே உட்பட சில எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர தயாராக உள்ளனர் என்று, பெலகாவி பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கூறியபடி காங்கிரசில் இருந்து 20 முதல் 30 எம்.எல்.ஏ.,க்கள் விலகினால், சித்தராமையா அரசு தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.
அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை கண்டறிந்து அவர்களை சமாதானப்படுத்தும்படி, சித்தராமையாவுக்கு, கட்சி மேலிடமும் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2018 ல் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைந்த போதும், குமாரசாமி தங்கள் பிரச்னைக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறி, 17 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-நமது நிருபர் -