/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் சேர்க்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
/
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் சேர்க்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் சேர்க்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் சேர்க்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
ADDED : செப் 16, 2025 05:14 AM

பெங்களூரு: எஸ்.டி., பிரிவில் குருபா சமூகத்தை இணைக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடக மக்கள் தொகையில் குருபா சமூகம் மூன்றாவது இடத்தில் உள்ளது; 50 லட்சம் பேர் உள்ளனர். இச்சமூகம் தற்போது ஓ.பி.சி., எனும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வருகிறது. தங்கள் சமூகத்தை, எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும் என, 25 ஆண்டுகளாக அச்சமூகத்தினர் கேட்டு வருகின்றனர்.
இச்சமூகத்தின் தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தபோது, தங்கள் சமூகத்தை, எஸ்.டி., பிரிவில் இணைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.
ஆனால், அந்த சிபாரிசு ஏற்கப்படவில்லை. தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, சமூகத்தினர் பல முறை போராட்டம் நடத்தி உள்ளனர்.
சிபாரிசு இப்போராட்டத்திற்கு பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அதே சமூகத்தை சேர்ந்தவருமான ஈஸ்வரப்பாவும் ஆதரவாக உள்ளார்.
ஆனால் இச்சமூகத்தை சேர்ந்த முதல்வர் சித்தராமையா, எஸ்.டி., பிரிவில் இணைப்பது பற்றி, இதுவரை எதுவுமே பேசியது இல்லை. தற்போது, தன் சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற ஆசைப்படுகிறார்.
இச்சமூகத்தின் உட்பிரிவான ஜெனு குருபா, காடு குருபா சமூகங்கள் ஏற்கனவே, எஸ்.டி., பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற உட்பிரிவு சமூகங்களையும், எஸ்.டி., பிரிவில் சேர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து பெங்களூரு விதான் சவுதாவில் இன்று, பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள், தேவையான தகவல், ஆவணங்களுடன் வரும்படி முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து, இச்சமூகத்தை எஸ்.டி., பிரிவில் இணைக்க, மத்திய அரசுக்கு மீண்டும் சிபாரிசு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பா.ஜ., எதிர்ப்பு இச்சமூகத்தை எஸ்.டி., பிரிவுடன் இணைக்க பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மைசூரு கிருஷ்ணராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவா கூறுகையில், ''முதல்வர் சித்தராமையாவுக்கு தன் சமூகம் மீது திடீர் பாசம் வந்துள்ளது.
''தன் மகன் யதீந்திராவின் அரசியல் எதிர்காலத்திற்காக ஏதோ செய்ய பார்க்கிறார். இச்சமூகத்தை, எஸ்.டி., பிரிவில் சேர்ப்பது உண்மையில் பெரிய குற்றம். இதனால், எஸ்.டி., உட்பிரிவுகளுக்கு அநீதி ஏற்படும். இவ்வளவு நாளாக முஸ்லிம்களை கவர்ந்து வந்த சித்தராமையா, இப்போது தன் சமூகத்தையும் கவர முடிவு செய்துள்ளார்,'' என்றார்.
மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''எஸ்.சி., சமூகத்தின் உள் ஒதுக்கீடு அறிக்கையின் மூலம், எஸ்.சி., உட்பிரிவின் ஜாதிகளுக்கு அநீதி நடந்துள்ளது. இதை சித்தராமையா முதலில் சரிசெய்ய வேண்டும்.
''தன் சமூகத்தை, எஸ்.டி., பிரிவில் இணைந்து, அச்சமூகத்திற்கு அநீதி இழைக்க, முதல்வர் நினைக்கிறாரா என தெரியவில்லை. மவுனமாக இருந்து காரியத்தை சாதிக்க பார்க்கிறார். பா.ஜ., ஆட்சியில் எஸ்.டி., சமூகத்திற்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது,'' என்றார்.