/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தையை கடத்திய பெண் அதிரடி கைது
/
குழந்தையை கடத்திய பெண் அதிரடி கைது
ADDED : அக் 23, 2025 11:03 PM
மைசூரு: தாயின் அருகில் படுத்திருந்த, ஆறு மாத குழந்தையை கடத்திய பெண்ணை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
மைசூரு ரயில் நிலையத்தின் நடைமேடையில் நேற்று முன் தினம் நள்ளிரவு, தங்களின் ஆறு மாத ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதி துாங்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென விழிப்பு ஏற்பட்டு பார்த்தபோது, தாயின் அருகில் படுத்திருந்த குழந்தை மாயமாகி இருந்தது. பீதியடைந்த தம்பதி, ரயில் நிலையம் முழுதும் குழந்தையை தேடினர். எங்கும் இல்லாததால் அழுது கதறினர்.
இவர்களை கவனித்த ரயில்வே போலீசார், என்னவென்று தம்பதியிடம் விசாரித்தபோது, குழந்தை மாயமானதை கூறினர். போலீசார் உடனடியாக குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
குழந்தை காணாமல் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். குழந்தையை ஒரு பெண் துாக்கிச் சென்றது தெரிய வந்தது.
சுற்றுப்பகுதிகளில் தேடி, அந்த பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான பெண் ஹாசனை சேர்ந்த நந்தினி, 50, என்பது தெரிந்தது.
அவரை அப்பகுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர் இதற்கு முன்பும், குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் உள்ளதால், தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

