/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
14 வயது சிறுமி மீட்பு விற்க முயன்ற பெண் கைது
/
14 வயது சிறுமி மீட்பு விற்க முயன்ற பெண் கைது
ADDED : ஜூலை 02, 2025 11:21 PM

ஹாவேரி: வீட்டை விட்டு வெளியேறும் சிறுமியரை மீட்டு, மற்றவருக்கு விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஹாவேரி, ஹனகல் தாலுகாவின், பாக்யவாதி கிராமத்தில் வசிப்பவர் லக்கவ்வா, 45. தனியாக வசித்த இவர், வாழ்க்கையில் நொந்த சிறுமியர், ஆதரவற்றோர், வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமியரை குறிவைத்து செயல்பட்டு வந்தார்.
ஹூப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே உட்பட, பல்வேறு பஸ் நிலையங்களில் தனியாக நடமாடும் சிறுமியரிடம் ஆறுதலாக பேசுவார். நல்ல வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து, தன் வீட்டுக்கு அழைத்து வருவார்.
தேவைப்படுவோருக்கு அந்த சிறுமியரை விற்று விடுவார். அல்லது திருமணம் செய்து கொடுத்து பணம் பெறுவார். அவர்களுடன் செல்ல மறுத்தால், அடைத்து வைத்து துன்புறுத்துவார். இவரது செயல் அக்கம், பக்கத்தினருக்கு தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, சிக்கமகளூரை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்து துன்புறுத்தினார். வீட்டில் இருந்து தப்பி, வெளியே சிறுமி ஓடி வந்தார். அப்போது லக்கவ்வா, சிறுமிக்கு பைத்தியம் பிடித்துள்ளதாக நாடகமாடினார்.
ஆனால், சிறுமி நடந்த விஷயத்தை அப்பகுதியினரிடம் விவரித்தார். அப்பகுதியினர் போலீசாரை வரவழைத்தனர். அவர்களும் சிறுமியை மீட்டு சிக்கமகளூருக்கு அனுப்பினர். லக்கவ்வாவை எச்சரித்தனர்.
ஆனால் அவர், தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. மீண்டும் ஒரு சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவரை விற்கவும் ஏற்பாடு செய்தார். இதற்கு சிறுமி எதிர்ப்புத் தெரிவித்ததால், அறையில் அடைத்து வைத்து இம்சித்தார்.
நேற்று மதியம் லக்கவ்வாவின் வீட்டுக்குள் இருந்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், உள்ளே சென்று பார்த்தபோது, அறை ஒன்றின் கட்டிலுக்கடியில் 14 வயது சிறுமியை முடக்கி வைத்திருப்பதை கண்டு, மீட்டனர்.
லக்கவ்வாவை நன்றாக உதைத்து, ஆடூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரும் அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. சிறுமியை பாதுகாப்பு மையத்தில் விட்டுள்ளனர்.