/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயத்தில் ட்ரோனை பயன்படுத்தும் பெண்கள்
/
விவசாயத்தில் ட்ரோனை பயன்படுத்தும் பெண்கள்
ADDED : செப் 29, 2025 05:26 AM

காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இன்றைய நவீன காலகட்டத்தில் எல்லாமே மாறிவிட்டது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்று அட்வான்ஸாக யோசித்து கொண்டு செல்கின்றனர்.
விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் கையால் தான் விதை துாவ முடியும் என்று, ஒரு காலத்தில் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி உள்ளது. ட்ரோனை பயன்படுத்தி, பயிர்களுக்கு ரசாயன மருந்து தெளிக்கும் நிலைக்கு விவசாயிகள் முன்னேறி உள்ளனர். ஆண் விவசாயிகளுக்கு நிகராக பெண் விவசாயிகளும், ட்ரோனை பயன்படுத்த ஆரம்பித்து இருக்கின்றனர். இவர்களில் மூன்று பெண்களை பற்றி பார்க்கலாம்.
மகாதேவி, 39 கொப்பால் கங்காவதி சிக்கஜந்தகல்லை சேர்ந்தவர் மகாதேவி, 39. எஸ்.எஸ்.எல்.சி., வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு, விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். கணவர் சந்திரசேகருடன் சேர்ந்து விவசாயம் செய்வதுடன், சிறிய அரிசி ஆலையும் நடத்துகிறார். நெல் மீதான ஆர்வத்தால், பல மாநிலங்களுக்கு சென்று நிபுணர்கள், விவசாயிகளை சந்தித்து, 80க்கும் மேற்பட்ட நெல் ரகத்தை பற்றி தெரிந்து வைத்து உள்ளார். பத்து ரக நெல்களை தானே பயிரிட்டு வளர்க்கிறார்.
விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த மகாதேவி, மத்திய அரசின் 'நமோ ட்ரோன் தீதி' என்ற திட்டத்தின் மூலம், பயிர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி எடுத்தார். இதற்காக சென்னை, ஹைதராபாத் சென்று பயிற்சி எடுத்து கொண்டார். தனது விவசாய நிலத்திற்கு மட்டுமின்றி, வேறு விவசாயிகளின் விவசாய நிலத்திற்கும், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கிறார். 1 ஏக்கருக்கு 350 ரூபாய் கட்டணமாக வாங்குகிறார்.
துளசி நெக்கந்தி, 33 கொப்பாலின் கங்காவதி தாலுகா, பராலி கிராமத்தை சேர்ந்தவர். இவரும், 'நமோ ட்ரோன் தீதி' திட்டத்தின் மூலம் ட்ரோன் இயக்க கற்றுக் கொண்டு, துங்கபத்ரா அணையை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள், கங்காவதி, கொப்பால், விஜயநகரா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கிறார். ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதன் மூலம் மருந்தின் சிறிய துகள்கள் நேரடியாக இலைகள் மீது விழுகின்றன.
இதனால் நல்ல மகசூல் கிடைக்கிறது. நிலங்களில் மருந்து தெளிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. 1 ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகிறது. ஆனால் ட்ரோன் உதவியுடன் 20 முதல் 30 நிமிடங்களில் மருந்து தெளித்து விடலாம் என்று துளசி நெக்கந்தி கூறினார்.
நாகரத்னா, 35 கொப்பாலின் குகனுாரை சேர்ந்தவர். கண்காட்சிகள், பிற நிகழ்ச்சிகள் ட்ரோன்கள் மூலம் புகைப்படம், வீடியோக்கள் எடுக்கப்படுவதை பார்த்து, ட்ரோனை பயன்படுத்த இவருக்கு ஆர்வம் வந்தது. இதற்காக முறையாக பயிற்சி பெற்று உள்ளார். இவரும், விவசாய நிலங்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கிறார்.
பெண்களுக்கு வருவாய் ஈட்டி தரும் ஆதாரமாக ட்ரோன் மாறி உள்ளது. பெண்கள் ட்ரோனை இயக்க கற்று கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முன்வர வேண்டும் என நாகரத்னா அழைப்பு விடுத்து உள்ளார்.
- நமது நிருபர் -