/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரொட்டி தயாரிப்பில் சாதிக்கும் மகளிர் அமைப்பு
/
ரொட்டி தயாரிப்பில் சாதிக்கும் மகளிர் அமைப்பு
ADDED : செப் 07, 2025 10:50 PM

கண்ணுக்கு மையழகு, கவிதைக்கு பொய்யழகு என்பது போல கலபுரகிக்கு ரொட்டி தான் அழகு. இங்கு விளையும் பொருட்களை வைத்து, தயாரிக்கப்படும் ரொட்டியின் சுவை அற்புதமாக இருக்கும். எனவே, எப்போதுமே கலபுரகி ரொட்டிக்கு அதிக மவுசு இருக்கும். இதை பயன்படுத்தி ரொட்டி தயாரிக்கும் கூட்டுறவு சங்கத்தில், பல பெண்கள் தங்கள் வீட்டிலேயே தயாரித்த ரொட்டியை கொண்டு வந்து கொடுத்து, வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கலபுரகி ரொட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கலபுரகியின் மையப்பகுதியில் செயல்படுகிறது. இது மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது, இச்சங்கத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் 3,000க்கும் மேற்பட்ட ரொட்டிகளை விற்பனைக்காக, 'பேக்கிங்' செய்து டெலிவரி செய்கின்றனர். இந்த ரொட்டிகள் மாநிலம் முழுதும் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த ரொட்டியை www.kalaburagirotti.com என்ற இணையதளத்திலும் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.
சுயமரியாதை இச்சங்கத்தை உருவாக்க கலபுரகி மாவட்ட கலெக்டர் பவுசியாவே காரணமாக இருந்தார். இவரே, சமையற்கூடம் கட்டுவதற்கும் உதவி செய்தார். இவரது முயற்சியின் பேரில், தற்போது ரொட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் நல்ல வளர்ச்சி பெற்று உள்ளது.
இந்த சங்கம் பல மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து ரொட்டியை வாங்கி கொள்கிறது. ரொட்டியின் தரம் குறித்து பரிசோதிக்கப்படும்.
இதன் மூலம் பல பெண்கள் தங்கள் வீட்டிலே தயாரிக்கும் ரொட்டியை கொண்டு வந்து கொடுத்து, பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் சுயமாக தொழில் புரிவதால், சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கலப்படம் இல்லை இது குறித்து ரொட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் ஷரணு கூறியதாவது:
நாங்கள் ஒரு நாளைக்கு 3,000 ரொட்டிகளை விற்பனைக்காக பேக்கிங் செய்து டெலிவரி செய்கிறோம். மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து, 5 ரூபாய்க்கு ரொட்டியை வாங்கி, 7 ரூபாய்க்கு கடைக ளுக்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு ரொட்டி பாக்கெட்டில் 10 ரொட்டிகள் இருக்கும். அதன் விலை 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது முழுக்க முழுக்க சத்தான உணவாகும். இதில் எந்த கலப்படமும் இல்லை. பல இடங்களில் கிளைகளை திறக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். சமீபத்தில், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் ரொட்டி விற்பனை செய்யும் கடையை துவக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கலபுரகி ரொட்டியை ஸ்விக்கி, அமேசானிலும் வாங்கி கொள்ள முடியும். எத்தனையோ பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களுக்கு ஆதரவு அளிக்கும் நாம், நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி ஆதரவு கொடுக்கலாமே.
- நமது நிருபர் -