/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலத்தை அதிகரிக்க காங்கிரசில் குஸ்தி
/
பலத்தை அதிகரிக்க காங்கிரசில் குஸ்தி
ADDED : மே 13, 2025 11:50 PM

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்து, இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, விஜயநகராவின் ஹொஸ்பேட்டில், பிரமாண்ட சாதனை மாநாடு நடத்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தன் இமேஜை அதிகரித்து கொள்ள, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சித்தராமையா என இருவருமே திட்டம் வகுத்து வருகின்றனர்.
கர்நாடகாவில் 2023 மே 20ல் காங்கிரஸ் ஆட்சி பதவிக்கு வந்தது. பல சவால்களை கடந்து, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. குறிப்பாக முதல்வர் சித்தராமையா தன் பதவியை தக்க வைத்து கொள்ள போராடுகிறார்.
எதிர்க்கட்சிகளை விட, சொந்த கட்சியில் உள்ள எதிரிகளை சமாளிப்பது, முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும்பாடாக உள்ளது.
கிளைமாக்ஸ்
அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த பின், மாநிலத்தில் முதல்வர் மாற்றம் நிகழும் என, காங்கிரசில் சிலர் கூறுகின்றனர்.
முதல்வர் மாற்றம் விவாதம் தொடர்பான கிளைமாக்ஸ் நெருங்குகிறது. இம்மாதம் 20ம் தேதியுடன், காங்., அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையொட்டி பிரமாண்ட சாதனை மாநாடு நடத்த, முதல்வர் திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. நாடு முழுதிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இது போன்ற நேரத்தில், இரண்டு ஆண்டு சாதனை மாநாடு நடத்துவது, சரியாக இருக்காது என, கருதி மாநாட்டை தள்ளி வைக்க முடிவு செய்தார்.
ஆனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், சித்தராமையா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். சாதனை மாநாடு நடத்த தயாராகிறார்.
மாநாட்டில் சில புதிய திட்டங்களை அறிவித்து, தன் செல்வாக்கை உயர்த்தி கொள்வது, முதல்வரின் எண்ணமாகும். எனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யும்படி, விஜயநகரா மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம், மாநில காங்., தலைவருமான துணை முதல்வர் சிவகுமாரும், சாதனை மாநாட்டை கட்சி சார்பில் வெற்றிகரமாக நடத்தி, தன் இமேஜை உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
எந்த பிரச்னையும் இல்லாத வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தயாராகிறார். நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது குறித்து, சிவகுமார் கூறியதாவது:
மாநில அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, வரும் 20ம் தேதி விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் சாதனை மாநாடு நடத்துவோம்.
சாதனை மாநாடு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் சூழல் இருந்ததால், நிகழ்ச்சியை தள்ளி வைக்க நினைத்திருந்தோம். தற்போது போர் நிறுத்தம் அறிவித்ததால், திட்டமிட்டபடி சாதனை மாநாடு நடத்துவோம்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், நிகழ்ச்சி நடக்கும். ஒரு லட்சம் வீடுகளுக்கு, வருவாய்த்துறை சார்பில், பட்டா அளிப்பதாக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தோம். அதன்படி பட்டா அளிக்கப்படும். மாநாட்டுக்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவரை வரவழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தத்தில் சித்தராமையா, சிவகுமார் என இருவருமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து கொள்கின்றனர். காங்கிரசில் எப்படியாவது குழப்பம் ஏற்படும் என எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் காத்திருக்கின்றன.
- நமது நிருபர் -