/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் மேம்பாலம் கட்ட யதுவீர் எதிர்ப்பு; முதல்வர் சித்தராமையாவுக்கு பகிரங்க கடிதம்
/
மைசூரில் மேம்பாலம் கட்ட யதுவீர் எதிர்ப்பு; முதல்வர் சித்தராமையாவுக்கு பகிரங்க கடிதம்
மைசூரில் மேம்பாலம் கட்ட யதுவீர் எதிர்ப்பு; முதல்வர் சித்தராமையாவுக்கு பகிரங்க கடிதம்
மைசூரில் மேம்பாலம் கட்ட யதுவீர் எதிர்ப்பு; முதல்வர் சித்தராமையாவுக்கு பகிரங்க கடிதம்
ADDED : நவ 05, 2025 11:48 PM

மைசூரு: மைசூரில் மேம்பாலம் கட்ட, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு, எம்.பி., யதுவீர் எழுதிய கடிதம்:
பொறுப்பை உணர்ந்து, மைசூரில் மேம்பாட்டுப் பணிகளை செய்ய வேண்டும். மைசூரு பாரம்பரியமிக்க மாவட்டமாகும். இதன் சிறப்பு தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல், நகரை பாதுகாக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, மாநில அரசு செயல்பட வேண்டும்.
மைசூரு நகர் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைகிறது. அதன்படி மேம்பாட்டுப் பணிகளை நடத்த வேண்டும். நகரின் வினோபா சாலை, ஜான்சி ராணி லட்சுமி பாய் சாலை என, இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்ட, அரசு திட்டமிடுவதாக தகவல் வந்துள்ளது. இந்த திட்டம் தேவையற்றது என்பது, என் கருத்தாகும். இவற்றை நான் எதிர்க்கிறேன். மேம்பாட்டுப் பணிகளின் பெயரில், மைசூரின் பாரம்பரியத்தை கெடுக்கக் கூடாது.
மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ள ஜே.எல்.பி., சாலை, வினோபா சாலை பாரம்பரிய சாலைகள். இவற்றை இப்படியே தக்கவைத்துக் கொள்ள வேண்டும். வினோபா சாலையில் மேம்பாலம் கட்டினால், சாலை ஓரத்தில் உள்ள நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டி வரும். எனவே இங்கு மேம்பாலம் கட்ட வேண்டாம். நகரின் அழகை கெடுக்கும் திட்டங்கள் தேவையில்லை.
போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு, மேம்பாலம் கட்டுவது மட்டுமே தீர்வு அல்ல. மெட்ரோ பாதை அமைக்க நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மும்பை நகரைப் போன்று சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கட்டும். மைசூரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மேம்பாட்டுப் பணிகளை செய்வது நல்லது.
மக்களிடம் கருத்தை கேட்டறியாமல், திட்டங்கள் வகுக்கக் கூடாது. எங்களின் எதிர்ப்பை மீறி மேம்பாலம் கட்டும் பணிகளை துவக்கினால், சட்ட போராட்டம் நடத்துவோம். மக்களின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம். கிரேட்டர் மைசூரு ஆணையம் அமைப்பது நல்லது தான். ஆனால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
இப்போது இருப்பது போன்றே, மாவட்டத்தின் பாரம்பரியம் நிலைத்திருக்க வேண்டும். இதை அழித்து விடக்கூடாது. மைசூரின் பெருமை, சிறப்புகளை தக்கவைத்துக் கொண்டு, நகரை மேம்படுத்துவது நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மைசூரின், சித்தார்த் நகரின் மாவட்ட அளவிலான அலுவலகங்களின் வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேவராஜ் அர்ஸ் சிலை, அவரது உருவத்தை போன்று இல்லை என, அவரது மகள் அதிருப்தி தெரிவித்துள்ளார். சிலை அமைப்பதற்கு முன்பு, அவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். உடனடியாக சிலையை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

