ADDED : ஆக 28, 2026 11:19 PM

- நமது நிருபர் -:
சுவையான, சத்துக்கள் நிறைந்த காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக கத்திரிக்காய் ஆம்லெட் உள்ளது. என்ன, கத்திரிக்காயில் ஆம்லெட்டா என்று ஆச்சரியமாக இருக்கலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கத்திரிக்காய் ஆம்லெட், 'டார்டாங் தலாங்' என்ற பெயரில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதை வீட்டில் எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை கத்திரிக்காயை நன்கு கழுவி, காம்பை நீக்காமல் முழுமையாக எடுத்து கொள்ளவும். கத்திரிக்காய் மீது சிறிதளவு எண்ணெய் தடவி, அடுப்பு தீயில் காட்டி சுட வேண்டும். வெளித்தோல் முற்றிலும் கருகி, உள்பகுதி நன்றாக வேகும் வரை திருப்பி, திருப்பி சுடவும்.
நன்றாக வெந்ததும், சிறிது நேரம் ஆற விட்டு, கருகிய வெளித்தோலை மெதுவாக உரித்து எடுக்கவும். பின், கத்திரிக்காயை தட்டில் வைத்து, காம்பை நறுக்காமல் தட்டையாக மசித்து கொள்ளுங்கள்.
அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், மஞ்சள், மிளகு துாள், கரம் மசாலா, தேவையான உப்பு சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். கொஞ்சமாக கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளலாம்.
அடுப்பை பற்ற வைத்து தோசை கல் அல்லது வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை, முட்டை கலவையில் நன்றாக நனைத்து, அனைத்து பக்கமும் முட்டை படுமாறு செய்ய வேண்டும்.
முட்டை கலவையில், நனைந்த கத்திரிக்காயை, அப்படியே தோசை கல்லில் வைத்து, அதன் மீது மீதமுள்ள முட்டை கலவையை ஊற்றி விட வேண்டும். மிதமான சூட்டில், 2 முதல், 3 நிமிடங்கள் வேகவிட்ட பின், ஆம்லெட்டை திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.
இப்போது சூடான, சுவையான கத்திரிக்காய் ஆம்லெட் ரெடி. இதை தக்காளி சாதம் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
