/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எலுமிச்சை போல பாக்.,கை பிழிய வேண்டும்
/
எலுமிச்சை போல பாக்.,கை பிழிய வேண்டும்
ADDED : மே 18, 2025 08:56 PM

ராம்நகர் : ''பாகிஸ்தானை எலுமிச்சை பழத்தை பிழிவது போன்று, பிழிந்தெடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அப்படி செய்யவில்லை,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராகிம் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து, காங்கிரசாருக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் சந்தேகம் உள்ளது. பஹல்காமுக்கு வந்த பயங்கரவாதிகள், தங்களின் வேலையை முடித்து கொண்டு, சுதந்திரமாக திரும்பி சென்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு துறை என்ன செய்கிறது.
புல்வாமா தாக்குதல் உட்பட, பயங்கரவாதிகளின் பல தாக்குதல்கள் நடந்தன. இதை நடத்தியது யார். அவர்கள் நாட்டுக்குள் எப்படி ஊடுருவினர்.
காஷ்மீரின் பாதுகாப்பு நடைமுறை, காஷ்மீர் போலீசாரிடம் இல்லை. லெப்டினென்ட் கவர்னர் கையில் உள்ளது. எனவே இந்த கேள்விகளுக்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தினரால், நாடு காப்பாற்றப்படுகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலில், மத்திய அரசின் தோல்வி தெரிகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய போது, நாடு முழுதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தது.
ஆனால் டிரம்ப் கூறினார் என்பதற்காக, போரை பிரதமர் மோடி நிறுத்தினார். டிரம்ப் யார்? நமது சித்தப்பாவா, பெரியப்பாவா. நமது நாட்டின் விஷயத்தில் தலையிட டிரம்ப் யார். இவர் கூறினார் என, போரை நிறுத்த மோடி யார்.
அன்றைய பிரதமர் இந்திரா, 93,000 பாகிஸ்தான் ராணுவத்தினரை சிறை பிடித்தார். அதேபோன்று பிரதமர் வாஜ்பாய், நமது நாட்டு விஷயத்தில் மூன்றாம் நபர் நுழையக்கூடாது என, திட்டவட்டமாக கூறினார். ஆனால் இன்றைய பிரதமர் மோடிக்கு, இது போன்ற ஆர்வம் இல்லை. இவர் முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு வரட்டும்.
போரை நிறுத்தினால், பயங்கரவாதிகளை பிடிக்க முடியுமா. பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாதது ஏன். நமது நாட்டின் 26 பேர் பலியானதற்கு, நியாயம் கிடைக்க வேண்டாமா. பஹல்காம் தாக்குதல் நடந்த பின், பிரதமர் பீஹாருக்கு சென்றார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களின் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை. பாகிஸ்தானை எலுமிச்சை பழத்தை பிழிவது போன்று, பிழிந்தெடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.