/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமெரிக்காவில் இருந்தபடியே திருட்டை தடுத்த இளம்பெண்
/
அமெரிக்காவில் இருந்தபடியே திருட்டை தடுத்த இளம்பெண்
அமெரிக்காவில் இருந்தபடியே திருட்டை தடுத்த இளம்பெண்
அமெரிக்காவில் இருந்தபடியே திருட்டை தடுத்த இளம்பெண்
ADDED : ஆக 28, 2025 11:07 PM

பாகல்கோட்: அமெரிக்காவில் இருந்து கொண்டே, பாகல்கோட்டில் தன் வீட்டில் நடக்கவிருந்த கொள்ளையை பெண் மென்பொறியாளர் தடுத்து நிறுத்தி பெற்றோரை காப்பாற்றினார்.
பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின் சித்தராமேஸ்வரா காலனியில் வசிப்பவர் ஹனுமந்த கவுடா. இவர் அரசு துறையில், பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் ஸ்ருதி, 24, அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார்.
சில ஆண்டுக்கு முன்பு, சொந்த ஊருக்கு வந்த ஸ்ருதி, தன் பெற்றோரின் பாதுகாப்புக்காக, வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினார்.
இங்கு நடப்பவற்றை அமெரிக்காவில் இருந்தே பார்க்க வசதியாக, கேமராக்களை தன் மொபைல் போனில் இணைத்துக் கொண்டார். தினமும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்வார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில், மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில், ஹனுமந்தகவுடா வீட்டுக்குள் புகுந்தனர். இந்தியாவில், அதிகாலை 2:00 மணி என்றால், அமெரிக்காவில் மதியம் 3:30 மணியாக இருக்கும்.
ஸ்ருதி மொபைல் போனில், தன் வீட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது, கொள்ளையர்கள் நுழைந்து, கதவருகில் செல்வது தெரிந்தது. உஷாரான ஸ்ருதி, உடனடியாக தன் பெற்றோருக்கு போன் செய்து, கதவை திறக்க வேண்டாம் என எச்சரித்து, வீட்டின் வெளிப்புறம், உட்புற மின் விளக்குகளுக்கான, 'சுவிட்ச்'களை போடும்படி கூறினார். அதன்படி அனைத்து மின் விளக்குகளையும், 'ஆன்' செய்தனர்.
இருட்டாக இருந்த வீட்டில், திடீரென வெளிச்சம் வந்ததால், பீதியடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியோடினர். ஸ்ருதியின் புத்திசாலித்தனத்தால், கொள்ளை கும்பலிடம் இருந்து, பெற்றோர் தப்பினர்.
கொள்ளையர்களில் ஒருவர் குரங்கு குல்லாய், மற்றொருவர் முகத்தில் முகக்கவசம் போட்டிருந்தார். இவர்கள் சட்டையும் நிஜாரும் அணிந்திருந்தனர். பேன்ட் அணிந்திருக்கவில்லை.
இதுகுறித்து, முதோல் போலீசாரிடம், ஹனுமந்த கவுடா புகார் செய்தார். போலீசாரும் சம்பவம் நடந்த பகுதிகளில், ரோந்தை அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.