/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிப்பால் நிதி சேகரித்து இல்லாதவர்களுக்கு உதவும் இளைஞர் குழு
/
நடிப்பால் நிதி சேகரித்து இல்லாதவர்களுக்கு உதவும் இளைஞர் குழு
நடிப்பால் நிதி சேகரித்து இல்லாதவர்களுக்கு உதவும் இளைஞர் குழு
நடிப்பால் நிதி சேகரித்து இல்லாதவர்களுக்கு உதவும் இளைஞர் குழு
ADDED : செப் 27, 2025 11:08 PM

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்று பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கு ஏற்ப உடுப்பியின் இளைஞர் குழு செயல்படுகிறது. இந்த குழுவின் தலைவராக இருப்பவர் சச்சின். துளு சினிமா துறையில் புகைப்பட கலைஞராக உள்ளார். ஷட்டர் பாக்ஸ் என்ற யு - டியுப் சேனலும் நடத்துகிறார். சச்சினும், அவரது குழுவில் உள்ள 30 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
இதுகுறித்து சச்சின் கூறியதாவது:
நானும், எனது நண்பர்கள் குழுவினரும் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக, காமெடியன்கள் போன்று வேடம் அணிந்து, வீடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறோம். இந்த வீடியோவுக்கு கிடைக்கும் லைக்குகள் மூலம் கிடைக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துகிறோம்.
நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தைக்கு மருத்துவ செலவுக்கு 25 லட்சம் ரூபாய் வசூலிக்க, முதன்முதலில் வேடம் அணிந்து நடித்தோம். வீடு, வீடாக சென்று மக்களை சிரிக்க வைத்து, அவர்களிடம் இருந்து காணிக்கையாக பணம் வாங்கினோம். பலரது உதவியால் அந்த குழந்தைக்கு நல்ல சிகிச்சை கிடைத்து தற்போது நலமாக உள்ளது.
பின், முதியோர் ஆசிரமத்திற்கு சொந்தமாக நிலம் வாங்கி கொடுக்க வேடம் அணிந்து தெருக்களில் நடனம் ஆடினோம். இப்போது உடுப்பி கார்கலாவில் வசிக்கும் 90 வயது மூதாட்டி குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொடுக்க, வேடம் அணிந்து உள்ளோம். அந்த மூதாட்டியின் குடும்பத்தினர், தெய்வீக நடன கலைஞர்களுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார்.
நாங்கள் அணியும் வேடங்கள், உடைகள் மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது; ஏழைகளுக்கு உதவுகிறது. எதையும் எதிர்பார்த்து எங்கள் குழுவினர் இல்லை. ஏழைகள் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும். இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஏழைகளுக்காக வேடம் அணிவதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .