ADDED : மே 27, 2025 12:42 AM
மைசூரு : ஹுன்சூரின், குருபுரா கிராமத்தில் புலி தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். புலியின் நடமாட்டத்தால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின், குருபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ், 26. இவர் தினமும் தன் நிலத்துக்கு சென்று, ஆடு மேய்ப்பது வழக்கம். அதே போன்று, நேற்று மதியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த புலி, ஹரிஷை தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர், உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவருக்கு எட்டு மாதங்களுக்கு முன்புதான், திருமணம் நடந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கவனமாக இருக்கும்படி கிராமத்தினரை எச்சரித்தனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
புலியின் நடமாட்டம் தென்படுவதால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.