/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜமீர் அகமது கான் மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதவி விலகுமாறு சொந்த கட்சியினரே நெருக்கடி
/
ஜமீர் அகமது கான் மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதவி விலகுமாறு சொந்த கட்சியினரே நெருக்கடி
ஜமீர் அகமது கான் மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதவி விலகுமாறு சொந்த கட்சியினரே நெருக்கடி
ஜமீர் அகமது கான் மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதவி விலகுமாறு சொந்த கட்சியினரே நெருக்கடி
ADDED : ஜூன் 23, 2025 11:26 PM

பெங்களூரு: வீட்டு வசதித்துறையில் பெருமளவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அமைச்சர் ஜமீர் அகமது கான் ராஜினாமா செய்யமாறு, சொந்த கட்சியினரே வலியுறுத்துகின்றனர். இதனால், ஜமீர் விரக்தி அடைந்துள்ளார்.
கர்நாடகாவில் வசிக்கும் ஏழைகள், குடிசைவாசிகள், வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டித்தரும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. ராஜிவ் காந்தி வீட்டு வசதி திட்டம், அம்பேத்கர் வீட்டு வசதி, பிரதமர் ஆவாஸ் உட்பட பல திட்டங்களின் கீழ், வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.
* குற்றச்சாட்டு
அந்தந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், தகுதியான பயனாளிகளின் பட்டியலை, வீட்டு வசதித்துறையிடம் அளித்து, வீடுகள் பெற்றுத்தர வேண்டும். ஆனால் பலரும் அப்படி செய்வது இல்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஆதரவாளர்கள், நெருக்கமானவர்களுக்கு வீடுகளை கொடுக்கின்றனர். உண்மையான பயனாளிகளுக்கு அநியாயம் நடக்கிறது என, ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதற்கிடையே பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, வீடுகள் கொடுப்பதாக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் குற்றஞ்சாட்டியதால், அமைச்சர் ஜமீர் அகமது கான், தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
ஜமீர் அகமது கான், ம.ஜ.த.,வில் இருந்து வந்தவர் என்றாலும், இவருக்கு காங்கிரசில் அதிகமான செல்வாக்கு இருந்து வருகிறது. முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர். மேலிடத்திலும் நல்ல பெயர் உள்ளது. காங்., அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபோது, விஜயநகரா, ஹொஸ்பேட்டில் பிரமாண்ட சாதனை மாநாடு நடத்தப்பட்டது. அதற்கான முழு பொறுப்பை ஏற்றிருந்த ஜமீர், சாதனை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
நிகழ்ச்சிக்கு பெருமளவில் மக்களை திரட்டியிருந்தார். தன் சொந்த செலவில் பஸ்களை ஏற்பாடு செய்து, மக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். இதன் மூலம் காங்., மேலிடத்திடம் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
இதைத் தகர்க்கும் விதமாக வீட்டு வசதி துறையில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டால், அமைச்சர் பதவியை ஜமீர் அகமது கான் ராஜினாமா செய்து கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்கும்படி, சாகர் காங்., - எம்.எல்.ஏ., பேளூர் கோபால கிருஷ்ணா உட்பட, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.
* முதல்வர் மவுனம்
இதுகுறித்து, ஷிவமொக்காவில், பேளூர் கோபாலகிருஷ்ணா அளித்த பேட்டி:
வீட்டு வசதித்துறையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று, அமைச்சர் ஜமீர் அகமது கான், ராஜினாமா செய்ய வேண்டும்.
பதவியை துறந்து, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். வீட்டு வசதித்துறையில் ஊழல் நடக்கவில்லை. அவர் நிரபராதி என்பது உறுதியானால், மீண்டும் அமைச்சர் பதவியில் அமரட்டும். இதற்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டை சுமந்த பல அமைச்சர்கள், ராஜினாமா செய்த உதாரணங்கள் உள்ளன. ஜமீர் அப்படி செய்தால், கட்சிக்கு ஏற்படும் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜமீர் அகமது கான் மீதான குற்றச்சாட்டு விஷயத்தில், முதல்வர் மவுனம் சாதிக்கிறார். சில அமைச்சர்கள் மட்டும், ஜமீருக்காக குரல் கொடுக்கின்றனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால், நாகேந்திரா அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. அதேபோன்ற சூழ்நிலை ஜமீருக்கு ஏற்பட்டாலும், ஆச்சரியப்பட முடியாது.
...பாக்ஸ்...
கவர்னரிடம் புகார்
சமூக ஆர்வலர் தினேஷ் கல்லள்ளி என்பவர், நேற்று மதியம் ராஜ்பவனுக்கு சென்றார். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மீது புகார் அளித்தார்.
புகாரில் கூறியுள்ளதாவது:
மாநிலத்தில் வீட்டு வசதித் திட்டங்களில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக ராஜிவ்காந்தி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளை, பயனாளிகளிடம் வழங்க லஞ்சம் பெறப்படுகிறது. பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே, வீடு கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழைகளுக்காக கட்டப்படும் வீடுகளை, அவர்களுக்கு வழங்க லஞ்சம் கேட்பது, பொது மக்களின் உரிமையை பறிப்பதாகும். உண்மையான ஏழைகளுக்கு திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை. எனவே வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வீட்டு வசதித்துறையில் நடந்த முறைகேட்டில், அமைச்சர் ஜமீர் அகமது கானின் பங்களிப்பு இல்லை. இதற்கு முன்பு நாகேந்திரா மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது, அனைவருக்கும் தெரியும். பி.ஆர்.பாட்டீலின் குற்றச்சாட்டில், ஜமீர் அகமது கானின் பங்கு என்ன? பஞ்சாயத்து அளவில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, இவர் எப்படி பொறுப்பாக முடியும்? அதனால் ஜமீர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- சந்தோஷ் லாட்,
அமைச்சர்,
தொழிலாளர் நலத்துறை