/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கல்விக்கடன் அடைப்பதை திறம்பட திட்டமிடுவது எப்படி?
/
கல்விக்கடன் அடைப்பதை திறம்பட திட்டமிடுவது எப்படி?
ADDED : பிப் 12, 2024 01:11 AM

படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைப்பதில் உயர் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. உயர் கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், கல்விக் கட்டணமும் உயர்ந்து வருவது பெரும் சவாலாக அமைகிறது.
உயர் கல்விக்கான செலவுகளை சமாளிக்க கல்விக்கடன் வசதி கைகொடுக்கிறது. மேலும், கல்விக் கடன் பயணத்தை துவக்குவது என்பது, நிதி பொறுப்புணர்வு பெறுவதன் துவக்கமாகவும் அமைகிறது. எனவே, கல்விக் கடனை திரும்பச் செலுத்துவதையும் மனதில் கொள்ள வேண்டும். கல்விக் கடனை அடைப்பதை திறம்பட திட்டமிடுவதற்கான வழிகள் இதோ:
பட்ஜெட் முக்கியம்:
கல்விக்கடன் தேவை தனிநபர்களுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. எனவே, சரியான கடனை தேர்வு செய்ய, கல்வி சூழல், எதிர்கால பணி வாய்ப்பு, கல்விக் கட்டணம், வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். கல்விக் கடனுக்கான பட்ஜெட்டை வகுத்துக்கொள்வதும் முக்கியம்.
கிரெடிட் ஸ்கோர்:
மற்ற கடன்கள் போலவே கல்விக் கடனையும் உரிய காலத்தில் திரும்பச் செலுத்த வேண்டும். கல்விக் கடனை அடைப்பது, மாணவர்களுக்கான நிதி பின்னணியை உருவாக்கும். கடன் தவணையை செலுத்த தவறுவது, கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம் என்பது போலவே, சரியாக திரும்பச் செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை உருவாக்கி கொள்வதில் உதவும்.
நிதி இலக்கு:
கடனை முறையாக திரும்பச் செலுத்துவது, கிரெடிட் ஸ்கோருடன் தொடர்பு கொண்டிருப்பது உள்ளிட்ட அம்சங்கள் கடன் பெற்றவருக்கு நிதி பொறுப்பை உண்டாக்குவதோடு, நிதி இலக்குகளிலும் கவனம் செலுத்த வைக்கும். தங்களுக்கு ஏற்ற சரியான கடனை தேர்வு செய்வதிலும் இது வழிகாட்டும்.
தவணை காலம்:
பொதுவாக கல்விக் கடனில், முதல் தவணையை செலுத்துவதற்கு முன், சலுகை காலத்தை வங்கிகள் அளிக்கின்றன. ஆனால், இந்த காலத்தில் தவணையை செலுத்த வேண்டாமே தவிர வட்டி உண்டு. எனவே, இந்த காலத்தில் எளிதான வட்டி அல்லது பகுதி அளவு வட்டியேனும் செலுத்த துவங்குவது நல்லது.
நிபந்தனைகள்:
சம்பாதிக்கத் துவங்கியதுமே மாதத் தவணையை துவங்கிவிட வேண்டும். முன்னதாக பொருந்தக்கூடியநிபந்தனைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.வாய்ப்பிருந்தால் படிக்கும் போதே பகுதி நேர பணி வாய்ப்பு மூலம் சேமித்து வைப்பது, தவணை செலுத்த துவங்கும் போது உதவும்.