ADDED : மே 08, 2024 12:58 AM

புதுடில்லி: 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், அதன் 'செமிகண்டக்டர் சிப்' மாதிரிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ், பெங்களூருவில் உள்ள அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், செமிகண்டக்டர்களை, தற்போது முதற்கட்டமாக வடிவமைத்து, தயாரித்து வருகிறது.
செமிகண்டக்டர்களுக்கான 'இன்டகரேடட் சர்க்யூட்ஸ், பிரின்டட் சர்க்யூட் போர்டு' ஆகியவற்றின் வடிவமைப்பு முறை, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதன் செமிகண்டக்டர் சிப் மாதிரிகள் சிலவற்றை, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு, டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிப்களின் சோதனை மற்றும் மேம்பாடு குறித்த கருத்துகளை பெறுவதற்காக, குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு, இந்த சிப்கள் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இந்த சிப்கள், ஒரு குறிப்பட்ட நோக்கத்துக்கு மட்டுமல்லாமல், பல்வேறு பொருட்களில் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த சிப்களின் வணிக ரீதியான தயாரிப்பை, 2027ம் ஆண்டு முதல் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செமிகண்டக்டர் வளர்ச்சிக்கு, ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமம், அசாம் மற்றும் குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

