பஞ்சுக்கான தேவை அதிகரிப்பு: 278 லட்சம் 'பேல்' விற்பனை
பஞ்சுக்கான தேவை அதிகரிப்பு: 278 லட்சம் 'பேல்' விற்பனை
ADDED : மே 09, 2024 02:22 AM

திருப்பூர்: நாட்டில், நடப்பு பருத்தி ஆண்டில், 316 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி மகசூல் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த வரத்து, 392 லட்சம் பேல்களாகவும், மொத்த தேவை, 335 லட்சம் பேல்களாகவும் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பேல் என்பது 170 கிலோ.
சில ஆண்டுகளில் இல்லாத அளவு, நவம்பரில் துவங்கி பிப்ரவரி வரை, பஞ்சு வரத்து அதிகமாக இருந்தது. பின், வரத்து படிப்படியாகக் குறைந்து விட்டது. தினசரி பஞ்சு வரத்து, 2 லட்சம் பேல்களாக இருந்தது, இந்த வாரத்தில், 23,000 பேல்களாக குறைந்துள்ளது.
நடப்பாண்டில், அதிக நீள நுாலிழை தயாரிக்கும் பஞ்சு இறக்குமதிக்கான வரியில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழிலில் மந்தநிலை மாறி வரும் நிலையில், பஞ்சுக்கான தேவை சற்று அதிகரித்துள்ளது. பஞ்சு விலை, 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி, 58,000 ரூபாய் முதல், 62,000 ரூபாய் வரை உள்ளது. வடமாநில சந்தைகளான ஹரியானா, ராஜஸ்தானில் வரத்து குறைந்து விட்டது. மத்திய சந்தை பகுதிகளான, குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிராவில் இருந்து மட்டும் அதிக அளவு பஞ்சு வந்து கொண்டிருக்கிறது.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் அடங்கிய தெற்கு சந்தையில் வரத்து மிகவும் குறைந்து விட்டது. இந்திய பருத்தி சங்க அறிக்கையின்படி, கடந்த மாதம் வரை, 278 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது பருத்தி பறிப்பு இருக்கும் என்பதால், வரும் மாதங்களிலும் பஞ்சு வரத்து இருக்கும் என, நுாற்பாலைகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் - டாஸ்மா சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''நடப்பாண்டில், தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, பஞ்சு கிடைக்கிறது. இடையே, விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், பஞ்சு இருப்பு வைக்கப்பட்டது; விலையில் பெரிய மாறுதல் இல்லாததால், அதன்பின் வரத்து சீராகி விட்டது. பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை,'' என்றார்.