ADDED : மே 03, 2024 10:03 PM

புதுடில்லி:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், வருமான வரிச் சட்டப்பிரிவில் உள்ள 45 நாள் கட்டண விதிமுறைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், புதிய ஒழுங்குமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகைகளை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாத நிலுவையில் உள்ள தொகைகள் வரி விதிப்புக்கு உள்ளாகும்.
குஜராத்தில் உள்ள 12,000 நிறுவனங்கள் உட்பட, 40,000த்துக்கும் மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள் தங்கள் பதிவுகளை ரத்து செய்ததுடன், ஒழுங்குமுறை சட்டத்தை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஒழுங்குமுறை சட்டத்தின் காரணமாக, ஏராளமான சிறு வணிக நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களிடமிருந்து இருந்து புதிய ஆர்டர்கள் பெறுவது சரிவடைந்துள்ளதாக, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வருமான வரிச்சட்டம் 1961இன் பிரிவு 43 பி.(எச்)ன் கீழ், 36 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை, 45 நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி, பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு ஏற்படும் செலவினங்களுக்கான வரி விலக்குகள் கோருவதை இப்பிரிவு அனுமதிக்காது. மேலும், இது நிறுவனங்களின் வரி பொறுப்பையும் அதிகரிக்கும்.
இதனடிப்படையில், கடந்த மாதம் 1ம் தேதி முதல், நிறுவனங்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 15 நாட்களில் அல்லது ஒப்பந்தத்தின் கீழ், 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, சிறு வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடர்பான இந்த வருமான வரி சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட இப்பிரிவை, வருகிற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்குமாறு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையிட்டுள்ளது.
45 நாட்களுக்குள் பணத்தை கொடுத்துவிட வேண்டும்
தவறும்பட்சத்தில் வரி விலக்கை கோர முடியாது
இதனால் பெரிய நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் கிடைப்பதில் சிக்கல்
நிதியமைச்சரிடமும் முறையீடு செய்யப்பட்டுள்ளது