சிவகங்கையில் தனியார் தொழிற்பேட்டை 45 அரிசி ஆலைகள் இணைந்து அமைக்கின்றன
சிவகங்கையில் தனியார் தொழிற்பேட்டை 45 அரிசி ஆலைகள் இணைந்து அமைக்கின்றன
ADDED : ஆக 08, 2024 12:58 AM

சென்னை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், 45 அரிசி ஆலைகள் இணைந்து, 175 ஏக்கரில், தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அப்படி அமையும் பட்சத்தில், அரிசி ஆலைகளுக்காக தமிழகத்தில் அமைக்கப்படும் முதல் தொழிற்பேட்டை என்ற சிறப்பை இது பெறும்.
நகரங்களுக்குள் செயல் படும் சிறுதொழில் சங்கங்கள், நகருக்கு வெளியே தங்களுக்குள் ஒன்றிணைந்து, தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் பட்சத்தில், அங்கு உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் நிதியுதவி செய்கிறது.
மொத்த திட்ட மதிப்பில், 15 கோடி ரூபாய் வரை உதவி செய்கிறது.
மதுரையில் செயல்படும் 45 அரிசி ஆலைகள் இணைந்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், 175 ஏக்கரில், தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அந்த ஆலைகள் தினமும், 1,000 டன் நெல்லை அரிசியாக மாற்றும் திறன் உடையதாக இருக்கும் என, தெரிகிறது.
இதுகுறித்து, அந்த தொழிற்பேட்டையின் நிர்வாகப் பிரிவு இயக்குனர் கிஷோர் கூறியதாவது:
மதுரை நகரில், 40 ஆண்டுகளுக்கு மேல் பல அரிசி ஆலைகள் செயல்படுகின்றன. நகரமயமாக்கல் வளர்ச்சியால் அந்த இடத்தில், தொழிலை விரிவாக்கம் செய்ய வாய்ப்பில்லை.
எனவே, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் ஆலோசனையின்படி, மதுரையில் உள்ள அரிசி ஆலைகளை விரிவாக்கம் செய்யும் வகையில், நகருக்கு வெளியில் மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, 45 அரிசி ஆலைகள் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், சிவகங்கையில் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக, 175 ஏக்கர் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
இதற்காக, 'பென்னிகுக் அக்ரோ பார்க் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை துவக்கிஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் உள்ள அரிசி ஆலைகளை விரிவாக்கம் செய்யும் வகையில், இந்த தொழிற்பேட்டை அமைகிறது
திருபுவனத்தில் அரிசி தொழிற்பேட்டை தமிழகத்தில் அரிசி ஆலைகளுக்கான முதல் தொழிற்பேட்டை 45 அரிசி ஆலைகள் இணைந்து அமைக்கின்றன தினமும் 1000 டன் நெல்லை அரிசியாக மாற்றும் திறன் 175 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்