ஆயிரம் சந்தேகங்கள் :அது என்ன பாரத் பாண்டு? சாமானியர்களும் முதலீடு செய்யலாமா?
ஆயிரம் சந்தேகங்கள் :அது என்ன பாரத் பாண்டு? சாமானியர்களும் முதலீடு செய்யலாமா?
ADDED : மே 13, 2024 12:31 AM

என் தம்பி ஒரு எம்.எல்.எம்., நிறுவனத்தில் மூன்றரை லட்ச ம் ரூபாய் பணம் கட்டினான். கட்டிய 20 நாளில் அதை ரத்து செய்வதற்கான மின்னஞ்சல் அனுப்பினான். அதற்கான 'சலுகைக் காலம்' முடிந்து விட்டது என்று பதில் வந்தது. பணம் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உண்டா?
யு.சசிகுமார், சென்னை.
இல்லை. நம் நாட்டில், எம்.எல்.எம்., செயின் மார்க்கெட்டிங், பிரமிட் வடிவ மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து வர்த்தக முறைகளும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்றே இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதையும் மீறித்தான் இத்தகைய திட்டங்களை, ஒருசில மோசடி நிறுவனங்கள் ரகசியமாக நடத்தி வருகின்றன. பல்வேறு சட்ட ஓட்டைகளை சொல்லி, வாடிக்கையாளர்களை நம்ப வைத்து ஏமாற்றியும் வருகின்றன.
எளியவர்கள் தான் இத்தகைய கவர்ச்சிகரமான, விரைந்து வருவாய் ஈட்டமுடியும் என்ற ஆசை காட்டும் திட்டங்களில் சேர்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் ஏன் இத்தகைய திட்டங்களில் சேர்கிறீர்கள் என்றுதான் காவல்துறை கேட்கும். பணம் கையை விட்டுப் போய்விட்டது. திரும்ப வாய்ப்பில்லை. அதையே நினைத்து மருகாமல், அடுத்த ஆக்கப்பூர்வமான வேலையைப் பார்க்க உங்கள் தம்பிக்கு அறிவுறுத்துங்கள்.
என் டிமேட் கணக்கில் வர்த்தகம் ஆகாத சில பங்குகள் உள்ளன. அவற்றை எப்படி கணக்கில் இருந்து வெளியேற்றுவது?
ஆர்.நாகராஜன், சென்னை.
உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் யாரேனும் ஒருவருக்கு அதை மாற்றித் தந்தால் மட்டுமே, அந்த பங்குகள் உங்கள் டீமேட் கணக்கில் இருந்து வெளியேறும். இதை ஆன்லைன் அல்லது படிவங்கள் நிரப்பிக் கொடுத்தும் செய்யலாம். உங்கள் புரோக்கர் யாரோ, அவரோடு கலந்துபேசி, அதற்குரிய வழிமுறைகளைத் தேர்வு செய்யவும்.
யாருக்கு வழங்கப் போகிறீர்களோ, அவர்களுக்கு டிமேட் கணக்கு இருக்கவேண்டும். எப்படி இருந்தாலும் வர்த்தகம் ஆகாத பங்குகள், உங்கள் உறவினர் கணக்கிலும் அப்படியே தான் இருக்கப் போகின்றன. என்ன ஒன்று, அவை உங்களை விட்டொழிந்தன என்று நிம்மதியாக இருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் உங்கள் டிமேட் கணக்கையே மூடுவதாக இருந்தால், அதற்கு ஒரு குறுக்குவழி சொல்கின்றனர். டிமேட் கணக்கில் இருக்கும் வர்த்தகம் ஆகாத பங்குகளை மீண்டும் காகிதப் பங்குகளாக மாற்றி தரச் சொல்லி, உங்கள் புரோக்கரை கேட்கலாம். அவை காகிதப் பங்குகளாக மாறிய பிறகு, டிமேட் கணக்கை மூடலாம்.
'பாரத் பாண்டு' என்றால் என்ன? மொத்தமாக முதலீடு செய்ய வேண்டுமா? சாமானியர்களும் முதலீடு செய்வது எப்படி?
கே.நாகநந்தினி, சேலம்.
பாரத் பாண்டு என்பது, கடன்பத்திரம் சார்ந்த இ.டி.எப்., எனும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு. அரசுத் துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் மட்டுமே இந்தத் திட்டத்தின் வாயிலாக திரட்டப்படும் பணம் முதலீடு செய்யப்படும். இவற்றை 'டார்கெட் மெச்சூரிட்டி பண்டு' என்றும் சொல்வர். குறிப்பிட்ட ஆண்டுகளின் முடிவில், இந்த பாண்டு இ.டி.எப். முதிர்வு அடையும் என்று அர்த்தம்.
அரசுத் துறை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், இது பாதுகாப்பான முதலீடு. ஆயிரம் ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். சாமானியர்களுக்கானது தான். புதிதாக பாண்டு இ.டி.எப்., வெளியிடப்படும் போது வாங்கிக் கொள்வதோடு, ஏற்கனவே சந்தையில் இருக்கும் பாரத் பாண்டு இ.டி.எப்.களை பங்குச் சந்தை வர்த்தக வலைதளங்கள் வாயிலாகவும் வாங்கலாம்.
என் வயது 72. என்னிடம் உள்ள 5 லட்சம் ரூபாயை, ஈக்விட்டி பண்டில் முதலீடு செய்தால், மூன்று ஆண்டுகளில் மொத்தம் எவ்வளவு தொகை கிடைக்கும்?
கே.சேகர், ஆவடி.
உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டது ஈக்குவிட்டி பண்டு திட்டத்தின் பெயர் அல்ல. அது பண்டுகளை வாங்கித் தரும் நிதி நிறுவனத்தின் பெயர் என்பதால், கேள்வியில் அந்தப் பெயரை நீக்கிவிட்டேன்.
நான் ஏதோ உங்கள் முதலீட்டு ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உங்கள் மகன் சொல்வது போல் கருதிக் கொள்ளுங்கள். உங்கள் கேள்வியில் இருந்தே, தங்களுக்கு பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களைப் பற்றி போதுமான, அத்தியாவசியமான அறிமுகம் இல்லை என்பது தெரிகிறது. தேவையில்லாத 'ரிஸ்க்' வேண்டாம்.
அடுத்த இரண்டு ஆண்டுகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை பற்றி நன்கு கற்றுக்கொண்டு, பின்னர், முதலீடு செய்யத் துவங்குங்கள்.
வங்கி மற்றும் நிதி சார்ந்த பணியில் எனக்கு எட்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அதை பயன்படுத்தி, 'மைக்ரோ பைனான்ஸ்' அல்லது நிதி சார்ந்த ஏதேனும் நிறுவனத்தை தொடங்க அதிகாரம் இருக்கிறதா?
இரா.சிவகுமார், திருப்பூர்.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும், என்ன விதமான தொழிலையும் துவங்கலாம். உங்களுக்கு அந்த அதிகாரம் உண்டு. மைக்ரோ பைனான்ஸ், நிதி சார்ந்த நிறுவனங்களைத் துவங்குவதற்கு உரிய மத்திய, மாநில அனுமதிகளைப் பெற வேண்டும். நிதி நிர்வாகத்தை திறமையாக செய்ய வேண்டும்.
இன்றைக்கு இந்தியா முழுக்க, கடன் தாகம் தகிக்கிறது. பணம் கிடைத்தால் போதும் என்று, எவ்வளவு வட்டி கொடுத்தேனும் கடன் வாங்குகின்றனர். இது உங்களுக்கு வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒன்றே ஒன்றுதான் நான் சொல்ல முடியும். மனசாட்சிக்கு பயந்து தொழில் செய்யுங்கள். லாபம் ஈட்டும் நோக்கில், ஏழை எளியோர் வயிற்றில் அடிக்காதீர்கள். ஏனெனில், பல மைக்ரோ பைனான்ஸ், நிதி நிறுவனங்கள் கந்துவட்டிக்காரர்கள் போல் செயல்படுகின்றனர் என்பதால் இந்த கோரிக்கையை வைத்தேன்.
'பேங்க் சேவர் டெபாசிட்' என்பது என்ன? இதனால் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வருமான வரி விலக்கு உண்டா?
எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்துார்.
எனக்கு தெரிந்து, வங்கி சேமிப்புக் கணக்கைத்தான் இப்படி அழைப்பர். எங்கே இந்த சொற்களைப் பார்த்தீர்கள்; எந்த வங்கியில் பார்த்தீர்கள் என்று தெரிவித்தால், நானும் கற்றுக்கொள்கிறேன்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881