'உதவி தொகையுடன் வங்கி பயிற்சி அடுத்த மாதம் துவங்கப்படும்'
'உதவி தொகையுடன் வங்கி பயிற்சி அடுத்த மாதம் துவங்கப்படும்'
ADDED : செப் 09, 2024 01:22 AM

புதுடில்லி:வங்கிகள், 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளுக்கு, மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, அடுத்த மாதம் துவங்க பரிசீலித்து வருவதாக, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் முன்னணி 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது, இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தெரிவித்ததாவது:
மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகையுடன், வங்கித் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தக் கூடும்.
இத்திட்டத்தின் கீழ், சந்தைப்படுத்தல் மற்றும் கடன் மீட்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு தனித்துவம் மிக்க திறன் ஏதும் தேவையில்லை; எளிதில் பயிற்சி பெற முடியும்.
இதன் வாயிலாக பயிற்சி பெறும் நபர்கள், திறனை வளர்த்துக்கொண்டு, தங்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதில், பயிற்சி பெறும் சிலர் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படவும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் அனைத்து வங்கிகளும் பங்குபெற்று, அரசின் உதவியுடன் வெற்றிகர மாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.