பட்ஜெட்டால் விலை குறைந்த தங்கம்; வருத்தத்தில் பத்திர முதலீட்டாளர்கள்
பட்ஜெட்டால் விலை குறைந்த தங்கம்; வருத்தத்தில் பத்திர முதலீட்டாளர்கள்
ADDED : ஜூலை 24, 2024 11:50 PM

புதுடில்லி:தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதை அடுத்து, அதன் விலை குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் அதேசமயம் அரசின் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்துள்ளோர் வருத்தமடைந்துள்ளனர். காரணம் அவர்களுக்கு கிடைக்கவிருந்த லாபத்தில் கணிசமான பகுதி குறைந்துவிட்டது தான்.
நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இதையடுத்து சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. அரசின் தங்க பத்திரங்களின் விலையும் குறைந்துள்ளது.
நேற்று, தேசிய பங்குச் சந்தையில் இப்பத்திரங்களின் விலை 2 முதல் 5 சதவீதம் வரை சரிந்தது. குறிப்பாக, வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதிர்ச்சி அடையவுள்ள தங்க பத்திரங்களின் விலை 2.60 சதவீதம் சரிந்து, கிராம் ஒன்றுக்கு 7,275 ரூபாயாக உள்ளது.
இப்பத்திரங்கள் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தவணையாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், விரைவில் முதிர்ச்சி அடையவுள்ள இந்த தங்க பத்திரத்திற்கு இறுதி விலை நிர்ணயம் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த சூழலில் தற்போது தங்கம் விலை குறைந்து உள்ளது.
இது, இப்பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் விலை நிர்ணயம் செய்வதற்கு முந்தைய மூன்று நாட்களின் சுத்தமான தங்கத்தின் சராசரி விலையைக் கொண்டே, இறுதி விலை நிர்ணயிக்கப்படும்.
தற்போது நிகழ்ந்துள்ள மாற்றங்களால், சில நாட்கள் முன்பு வரை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தையில் தங்க பத்திரங்களின் விலை இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை சரிந்துள்ளது