ஏப்ரல் - ஜனவரி 10 மாதங்களில் சிமென்ட் விலை 7சதவிகிதம் குறைந்தது
ஏப்ரல் - ஜனவரி 10 மாதங்களில் சிமென்ட் விலை 7சதவிகிதம் குறைந்தது
ADDED : மார் 05, 2025 12:56 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் சிமென்ட் விலை 7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக, மதிப்பீட்டு நிறுவனமான இண்ட் - ரா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
தேவை குறைவு மற்றும் முன்னணி நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டி காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாத காலகட்டமான ஏப்ரல் - ஜனவரியில் சிமென்ட் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் குறைந்தது.
பருவ மழை மற்றும் பண்டிகை காலத்துக்கு பின், கட்டுமான நடவடிக்கைகள் வேகம் எடுத்ததால் 2024 நவம்பர் முதல் சிமென்ட் விலை தொடர்ச்சியாக அதிகரித்திருந்தாலும், அவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தன.
நான்காவது காலாண்டில், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாலும், முன்னணி நிறுவனங்களின் பெரிய அளவிலான வினியோக இணைப்பால் ஒட்டுமொத்தமாக விலை நிர்ணய சூழலை பலவீனமாக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டில் சிமென்ட் விலை, ஒற்றை இலக்க சரிவை காண வாய்ப்புள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச வீழ்ச்சியாகும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.