ADDED : பிப் 23, 2025 12:36 AM

திருப்பூர்:ரசாயனம் இல்லாத ஜவுளி உற்பத்தி நிலையை உறுதி செய்யும் திட்டம், மத்திய ஜவுளித்துறை சார்பில் உலக வங்கியின் 8 கோடி ரூபாய் நிதி உதவியுடன், திருப்பூரில் துவங்கப்பட்டுஉள்ளது.
வரும் நிதியாண்டில் துவங்கி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு, நீடித்த, நிலையான பசுமை சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் செயல்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சந்தை வாய்ப்புகள் இதன் வாயிலாக எளிதாகும்.
உலக வங்கி நிதி உதவியுடன், நம் நாட்டில் இதற்காக எட்டு கிளஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான திருப்பூர் பின்னலாடை கிளஸ்டருக்கு, முதல் கட்டமாக, 8 கோடி ரூபாய் நிதி உதவியுடன் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க ஆலோசகர் பெரியசாமி கூறியதாவது:
'யுனிடோ' அமைப்பின் வழிகாட்டுதலுடன், திருப்பூர் கிளஸ்டரில் ஜவுளி உற்பத்தியில் ரசாயன கழிவு இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். திருப்பூர் கிளஸ்டர், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில் முன்னோடியாக இருக்கிறது. அதை, சர்வதேச அளவில் ஆவணப்படுத்தும் முயற்சியாக, வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பணிகள் நடைபெறும்.
திருப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்கள் சிலவற்றை தேர்வு செய்து, உற்பத்தி படிநிலைகளை ஆராய்ந்து, ரசாயனக்கழிவு இல்லாத ஜவுளி உற்பத்தியாக பசுமை சார் உற்பத்தி நிலை உருவாக்கப்படும்.
இதற்கான பணிகள், 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சி அரங்கில் இருந்தவாறு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் துவக்கிவைக்கப்பட்டது.
இவ்வாறு பெரியசாமி கூறினார்.