15 ஆண்டு பழசான வாகனத்தை மாற்றினால் தள்ளுபடி வழங்க நிறுவனங்கள் தயார்: அமைச்சர் கட்கரியிடம் தயாரிப்பாளர்கள் ஒப்புதல்
15 ஆண்டு பழசான வாகனத்தை மாற்றினால் தள்ளுபடி வழங்க நிறுவனங்கள் தயார்: அமைச்சர் கட்கரியிடம் தயாரிப்பாளர்கள் ஒப்புதல்
ADDED : ஆக 28, 2024 02:54 AM

புதுடில்லி:சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய வாகனங்களை மாற்றி, புதிய வாகனம் வாங்கும்போது தள்ளுபடி வழங்க வாகன தயாரிப்பு நிறுவனங்களின் சங்கமான 'சியாம்' முன்வந்துள்ளது.
வாகனத் துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டில்லியில் சியாம் அமைப்பினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு சியாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது:
கோரிக்கை ஏற்பு
சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய, மீண்டும் பயன்படுத்த இயலாத பழைய வாகனங்களை கைவிடுவோருக்கு வழங்கப்படும் 'ஸ்க்ராப்பேஜ்' சான்றிதழைக் கொண்டு, புதிய வாகனம் வாங்கும்போது, தள்ளுபடி வழங்க அமைச்சர் வலியுறுத்தினார். இதை பயணியர் மற்றும் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்பதாக கூறியுள்ளன.
வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்க்ராப்பேஜ் சான்றிதழ் மீது, இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளுபடி வழங்க முன்வந்துள்ள நிலையில், பைக், கார் போன்ற வாகன தயாரிப்பாளர்கள், பண்டிகை காலத்திற்கு மட்டும் தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளனர்.
பழைய வாகனங்களை மாற்றும்போது வாகன நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடியால், மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை கைவிட, மேலும் பலர் முன்வருவர்.
இதன் வாயிலாக பாதுகாப்பான, துாய்மையான, அதிக வசதிகள் கொண்ட வாகனங்கள் சாலைகளில் அதிகரிக்க வழியேற்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.50% வரை தள்ளுபடி
கடும் புகை மற்றும் சத்தம் எழுப்பக்கூடிய, 15 ஆண்டுகால வாகனங்களை மாற்றி, புதிய வாகனம் வாங்குவோருக்கு நிறுவனங்கள், 1.50 முதல் 3.50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளன.
அதாவது, புதிய வாகனத்தின் விலை 1 லட்சம் ரூபாய் என்றால், 3,500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.
ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்க அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தும் நிலையில், தங்களால் அதிகபட்சம் 3.50 சதவீத தள்ளுபடியே வழங்க முடியும் என, வாகன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.