ADDED : செப் 01, 2024 12:50 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலத்தில், மாநிலங்களுக்கு 57,109 கோடி ரூபாய் கூடுதலாக வரிப்பகிர்வு வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், மத்திய அரசின் வரி வருவாயில் 3.66 லட்சம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 57,109 கோடி ரூபாய் அதிகம்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரை, மொத்த வருவாய் 10.23 லட்சம் கோடியாக உள்ளது.
இது, ஒட்டுமொத்த நிதியாண்டின் வருவாய் கணிப்பில் 31.9 சதவீதம். மொத்த வருவாயில் 7.15 லட்சம் கோடி ரூபாய், வரிகள் வாயிலாக பெறப்பட்ட நிலையில், 3.66 லட்சம் கோடி ரூபாய், மாநிலங்களின் வரிப்பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது.
அரசின் செலவை பொறுத்தவரை, 13 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், நிதியாண்டின் மொத்த செலவுக்கான கணிப்பில், அது 27 சதவீதமாக உள்ளது.
முதலீட்டு செலவினமாக 2.61 லட்சம் கோடியும், வருவாய் செலவினமாக 10.39 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டன. வருவாய் செலவினத்தில் 1.25 லட்சம் கோடி ரூபாய் மானியங்களுக்கும், 3.28 லட்சம் கோடி ரூபாய் கடன் வட்டிக்கும் செலவிடப்பட்டன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.