துபாய் ஜவுளி கண்காட்சி புதிய ஆர்டர்களுக்கு வாய்ப்பு
துபாய் ஜவுளி கண்காட்சி புதிய ஆர்டர்களுக்கு வாய்ப்பு
ADDED : ஆக 25, 2024 12:03 AM

திருப்பூர்:துபாயில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 'பிராண்ட்ஸ் ஆப் இந்தியா' சர்வதேச ஜவுளி கண்காட்சி வாயிலாக, புதிய வர்த்தக வாய்ப்புகளை நம் நாடு ஈர்க்க வாய்ப்பு உள்ளது.
மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சிடம் இருந்து, புதிய ஆர்டர்களை ஈர்க்கும் வகையில், பிராண்ட்ஸ் ஆப் இந்தியா கண்காட்சி, துபாய் உலக வர்த்தக கண்காட்சி மையத்தில், வரும் நவ., 12ல் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில், 63 நாடுகளைச் சேர்ந்த, 10,000த்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகமைகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.
ஏ.இ.பி.சி., எனப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், கண்காட்சியில் பங்கேற்க ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சிடம் வர்த்தக உறவு மேம்பட, தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நகைகள், இயந்திரங்கள், ஆயத்த ஆடைகள் என, பல்வேறு பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அங்கிருந்து, இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், “தாராள வர்த்தக ஒப்பந்தத்தால், ஐக்கிய அரபு நாடுகளுடன் ஒவ்வோர் ஆண்டும் வர்த்தகம் உயருகிறது.
“கடந்த நவ., மாதம், 562 கோடி ரூபாயாக இருந்த, மாதாந்திர ஏற்றுமதி, 2024 மார்ச்சில், 999 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இக்கண்காட்சியில் பங்கேற்பதால், வரும் ஆண்டுகளில் புதிய ஆர்டர்களை ஈர்க்க அதிகபட்ச வாய்ப்பு உள்ளது' என்றனர்.