சீனாவிலிருந்து அலுமினிய பாயில் இறக்குமதியை குறைக்க முயற்சி
சீனாவிலிருந்து அலுமினிய பாயில் இறக்குமதியை குறைக்க முயற்சி
ADDED : செப் 09, 2024 01:13 AM

புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினிய பாயில்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க டி.ஜி.டி.ஆர்., பரிந்துரை செய்துள்ளது.
உணவுப் பொருட்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடிய 'பேக்கேஜிங்' பொருளான அலுமினியம் பாயில்கள், சீனாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் பாதிப்புஅடைவதாக, உள்நாட்டு தொழில்துறையினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து டி.ஜி-.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது.
விசாரணையில், சீனாவின் அலுமினிய பாயில்கள் இறக்குமதி மதிப்பு, நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் 4.98 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது.
இது, முந்தைய ஆண்டில் 4.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததைக் காட்டிலும், பத்து சதவீதம் அதிகமாக இருந்தது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, சீன அலுமினிய பாயில்களுக்கு, டன் ஒன்றுக்கு 51,000 முதல் 72,000 ரூபாய் வரை பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க, மத்திய நிதிஅமைச்சகத்துக்கு, டி.ஜி.டி.ஆர்., பரிந்துரைத்துள்ளது. இதன் மீதான இறுதி முடிவை, நிதி அமைச்சகம் எடுக்கும் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது.