இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாவதில் ஐந்தாவது இடத்தில் மின்னணு பொருட்கள்
இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாவதில் ஐந்தாவது இடத்தில் மின்னணு பொருட்கள்
ADDED : செப் 02, 2024 01:15 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில், மின்னணு பொருட்கள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, அத்துறையின் கூடுதல் செயலர் புவனேஷ் குமார் தெரிவித்ததாவது:
கடந்த நிதியாண்டில், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 23 சதவீதம் வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வரிசையில், இப்பொருட்கள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
நாட்டின் மின்னணு பொருட்களின் தயாரிப்பு, கடந்த மார்ச் மாதம் 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இது கடந்த 2017ம் ஆண்டில், கிட்டத்தட்ட 4.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பது தொடங்கவுள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில், இப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் லாபகரமானதாக இருக்கும்.
கிட்டத்தட்ட 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில், மின்னணு பொருட்களின் உற்பத்தி பங்களிப்பு 33.20 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மீதமுள்ளது தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்தது.
உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 'ஸ்பெக்ஸ்' எனும் மின்னணு உதிரி பாகங்கள் மற்றும் செமிகண்டக்டர்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் இரண்டாவது கட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் பங்களிப்பு
செல்போன்
- 43%
தொலைக்காட்சி, கணினி
- 12%
வாகனத்துறை
- 8%
தகவல் தொழில்நுட்ப
வன்பொருள்
-4%