எத்தனால் தயாரிப்புக்கு அரிசி மீண்டும் வழங்க வலியுறுத்தல்
எத்தனால் தயாரிப்புக்கு அரிசி மீண்டும் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஆக 10, 2024 12:37 AM

புதுடில்லி:இந்திய உணவுக் கழகம், எத்தனால் தயாரிப்புக்கு அரிசி வழங்குவதை மீண்டும் துவங்க வேண்டும் என, பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பார்த்தசாரதி ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய உணவுக் கழகம், எத்தனால் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அரிசி வழங்கி வந்த நிலையில், இதை நிறுத்திக்கொள்வதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பார்த்தசாரதி ரெட்டி தெரிவித்ததாவது:
இந்திய உணவுக் கழகம், தானியத்தை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, சேதமடைந்த மற்றும் உபரி அரிசி வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
கடந்த 2018ம் ஆண்டுக்கு முன் வரை, வெல்லப்பாகிலிருந்து தயாரிக்கப்பட்ட எத்தனாலை மட்டுமே எரிபொருள்களில் கலக்க அரசு அனுமதித்தது.
இதையடுத்து, அதே ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எரிபொருள் கொள்கையில், சேதமடைந்த உணவு தானியங்களையும் எத்தனால் தயாரிக்க பயன்படுத்தலாம் என்று அறிவித்தது.
அரசின் இந்த கொள்கையை பின்பற்றி, கடந்த நான்கு ஆண்டுகளில், நாடு முழுதும் 25,000 கோடி ரூபாய் முதலீட்டில், தானியம் சார்ந்த எத்தனால் தயாரிக்கும் 131 ஆலைகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரிசி வழங்குவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துஉள்ள இந்திய உணவுக் கழகத்தின் திடீர் முடிவு, இத்தொழில் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலப்பை எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கை எட்டுவதிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த இலக்கை எட்ட, அடுத்தாண்டுக்குள் 1,000 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.
தானியம் சார்ந்த எத்தனால் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே 600 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கும் திறன் கொண்டுஉள்ளன.
இவ்வாறு தெரிவித்தார்.