தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது
தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது
UPDATED : மார் 22, 2024 12:35 PM
ADDED : மார் 22, 2024 12:35 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 6,140 ரூபாய்க்கும்; சவரன், 49,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து, 6,235 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து, 49,880 ரூபாய்க்கு விற்பனையானது.
இதையடுத்து, சவரன் தங்கம், 50,000 ரூபாயை நெருங்கி வருவது, மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி கிராமுக்கு 1.50 ரூபாய் உயர்ந்து, 81.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி நேற்று கூறியதாவது:
அமெரிக்காவில் நேற்று நடந்த 'பெடரல்' கூட்டமைப்பின் கூட்டத்தில், 'வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் தற்போது உள்ள விகிதமே தொடரும்' என்று தீர்மானிக்கப்பட்டது. அதேபோல், பங்குச் சந்தை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், உலக முழுதும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும். அதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

