சோலார் மேற்கூரையை அடுத்து பம்புகள் நிறுவுவதில் அரசு தீவிரம்
சோலார் மேற்கூரையை அடுத்து பம்புகள் நிறுவுவதில் அரசு தீவிரம்
ADDED : மே 17, 2024 10:05 PM

புதுடில்லி:பிரதம மந்திரியின் சோலார் மேற்கூரை திட்டத்தைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு சோலார் விவசாய பம்புகள் நிறுவுவதை நெறிப்படுத்துவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி சோலார் மேற்கூரை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் சக்தி அலகுகளை நிறுவ விரும்பும், 1 கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்டது.
அரசின் இத்திட்டத்தில் பங்கேற்க, எதிர்பார்த்ததைவிட அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில், இதுவரை 8 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கான சோலார் பம்பு நிறுவுவதற்கு என, தேசிய இணையதளத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. சோலார் பம்புகளுக்கான தேசிய பதிவு வாயிலாக விவசாயிகளை, விற்பனையாளர்களுடன் இணைப்பதே, இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், இந்த பதிவின் வாயிலாக, விவசாயிகள் தங்களின் தேவைகளை நேரடியாக விற்பனையாளர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
அத்துடன், விவசாயிகள் தாங்கள் விரும்பும் சோலார் பம்புகளை தேர்ந்தெடுப்பதற்கும், நிறுவும் நேரத்தை குறைப்பதற்கும் இந்த முயற்சி உதவும். மேலும், இத்திட்டம் மூன்று வகை பிரிவுகளை கொண்டதாக இருக்கும். இந்த மூன்று பிரிவுகளுக்கும் மத்திய அரசு 34,422 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த பம்புகள் நிறுவுவதற்கு, மத்திய அரசு சார்பில் 30 சதவீதமும், மாநில அரசு சார்பில் 30 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
மேலும், விவசாய பம்புகளை நிறுவுதல் மற்றும் சூரிய மின் சக்தியை பயன்படுத்துதல் மற்றும் திட்டத்தை நெறிப்படுத்துதல் குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்து உள்ளனர்.

