ADDED : ஏப் 04, 2024 10:50 PM

புதுடில்லி,:ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, கூடுதலாக 10,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு, கடந்த மாதம் 1ம் தேதி, 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்திருந்தது. இந்நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 10,000 டன் வெங்காயத்தை என்.சி.இ.எல்., எனப்படும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்தின் வாயிலாக, ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது-.
வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. கடந்த 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2023 ஆகஸ்ட் 4ம் தேதி வரை, 9.75 லட்சம் டன் வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், முதல் மூன்று நாடுகளாக வங்கதேசம், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

