இட்லி, தோசை மாவு மிக்ஸ் 18% ஜி.எஸ்.டி., உறுதியானது
இட்லி, தோசை மாவு மிக்ஸ் 18% ஜி.எஸ்.டி., உறுதியானது
ADDED : ஜூன் 10, 2024 11:32 PM

புதுடில்லி : தோசை, இட்லி மற்றும் தோக்லா போன்ற உணவு வகைகளுக்கான, 'உடனடி மாவு மிக்ஸ்'களை சத்து மாவாக வகைப்படுத்த முடியாது என, குஜராத் மாநில ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த உடனடி மாவு மிக்ஸ்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த 'கிச்சன் எக்ஸ்பிரஸ் ஓவர்சீஸ்' நிறுவனம் தோசை, இட்லி, தோக்லா போன்ற உணவு வகைகளுக்கான உடனடி மாவு மிக்ஸ்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் உடனடி மாவு மிக்ஸ்கள், 'ரெடி டு ஈட்' அதாவது உண்ணத் தயாரானவை என வகைப்படுத்தப்பட்டு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து குஜராத் மாநில ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு ஆணையத்தில், கிச்சன் எக்ஸ்பிரஸ் மேல் முறையீடு செய்தது.
இந்த மாவு மிக்ஸ்கள் அனைத்துமே குறிப் பிட்ட சில சமையல் செயல்முறைகளை மேற் கொண்ட பின்னரே உண்ணும் நிலையை அடையும் என்பதால், இவற்றை 'ரெடி டு குக்' அதாவது சமைக்க தயாரானவை என்றே வகைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
மேலும் இவற்றை சத்து மாவாகக் கருதி, 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் இதனை விசாரித்த மேல்முறையீட்டு ஆணையம், சத்து மாவில் பயன்படுத்தப்படும் பொருட்களும், இந்த உடனடி மிக்ஸ்களில் பயன்படுத்தப்படும் பொருட்களும் வெவ்வேறு என்பதால், ஜி.எஸ்.டி., விதிகள் மாறுபடும் என்று தெரிவித்தது.
மேலும் உண்ணுவதற்கு முன்பு, சில சமையல் செய்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற காரணம் மட்டுமே, நிறுவனத்தின் வாதத்தை நியாயப்படுத்தாது என்று கூறி, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க உத்தரவிட்டது.