சீன பெர்சனல் கம்ப்யூட்டர்கள் இறக்குமதி 3 சதவீதம் சரிவு
சீன பெர்சனல் கம்ப்யூட்டர்கள் இறக்குமதி 3 சதவீதம் சரிவு
ADDED : ஏப் 10, 2024 07:01 AM

புதுடில்லி : சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கடந்த 2023 நவம்பர் முதல், 2024 பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், 3 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் இறக்குமதிக்காக சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இக்கட்டுப்பாடுகளின்படி, ஐ.டி., வன்பொருட்கள் இறக்குமதிக்கு, உரிய அனுமதியை பெற வேண்டும் எனவும்; இதற்கு முறையாக அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நடைமுறை கடந்த நவம்பரில் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 2023 நவம்பர் முதல், 2024 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பி.சி., எனப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 3 சதவீதம் குறைந்து 7,611 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கணினிகளின் மதிப்பு 7,887 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டில் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கணினிகளின் மதிப்பு 14,525 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கட்டுப்பாடுகள் வந்த பிறகு, 2023 நவம்பர் முதல் 2024 பிப்ரவரி வரையிலான மதிப்பீட்டு காலத்தில், 7,611 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல், புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, கிட்டத்தட்ட 83,000 கோடி ரூபாய் மதிப்புடைய மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரிய, 111 மின்னணு நிறுவனங்களின் விண்ணப்பங்களில், 110 விண்ணப்பங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

