வெப்ப அலை, தேர்தல் காரணமாக சர்க்கரையின் தேவை அதிகரிப்பு
வெப்ப அலை, தேர்தல் காரணமாக சர்க்கரையின் தேவை அதிகரிப்பு
ADDED : ஏப் 24, 2024 12:13 AM

புதுடில்லி:வெப்ப அலை மற்றும் தேர்தல் போன்ற காரணங்களால், இந்தியாவில் சர்க்கரையின் தேவை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில், கோடைக்கால மாதங்களான மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஜூன் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் நுகர்வு உள்ளிட்ட காரணங்களினால், சர்க்கரைக்கான தேவை உயரும். ஆனால், இந்த ஆண்டு வழக்கமான சராசரி தேவைக்கும் அதிகமாக உள்ளது.
வெப்ப அலைகள் மற்றும் நாடு முழுதும் நடந்து வரும் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பேரணிகளால், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களின் நுகர்வு அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும், ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையே, இயல்பைவிட அதிக வெப்ப அலை நாட்கள் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழில்துறையினர் கூறியிருப்பதாவது:
வெப்ப அலை மற்றும் தேர்தல் காலம் என்பதால், ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில், இந்தியாவின் சர்க்கரை நுகர்வு 75 லட்சம் டன்களாக உயரக்கூடும். இது முந்தைய ஆண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும். இந்த நுகர்வு அதிகரிப்பு தற்காலிகமானது. தேவை வளர்ச்சி, அடுத்த ஆண்டு இயல்பான நிலைக்கு திரும்பும்.
கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2022 - 23ம் சந்தைப்படுத்தல் ஆண்டில், இந்தியாவின் சர்க்கரை நுகர்வு 2.78 கோடி டன்களாக இருந்தது.
அதிக தேவையின் காரணமாக, சர்க்கரையின் விலை தற்போது உயரத் துவங்கியுள்ளது. கடந்த 15 நாட்களில், 3 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்திற்கான அதிகப்படியான ஒதுக்கீட்டை அரசு ஒதுக்கியுள்ளது. இருப்பினும், மொத்த நுகர்வோரின் வலுவான தேவையின் காரணமாக, விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
கடந்த 15 நாட்களில் 3 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

