ADDED : ஆக 22, 2024 01:31 AM

பெங்களூரு : ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்ரீராம் பிராப்பர்டீஸ்' 25ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதன் புதிய இலச்சினை பெங்களுருவில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு செயல்பாடுகளை கொண்டாடும் விதமாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முரளி மலையப்பன் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தினார்.
மேலும், இந்நிகழ்வின் போது, 'எஸ்.பி.எல்.,நெக்ஸ்ட்' எனும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் விற்பனையை இரட்டிக்கவும்; வருவாயை மூன்று மடங்காக்கவும்; லாபத்தை நான்கு மடங்காக்கவும் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் பிராப்பர்டீஸ், வளர்ச்சியை கருத்தில்கொண்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதுவரை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஐந்து நகரங்களில் செயல்பட்டு வந்த நிறுவனம், விரைவில் புனே நகரில் செயல்பாடுகளை துவங்க உள்ளது.
இனி வரும் காலங்களில் சொகுசு வீடு பிரிவு மட்டுமல்லாமல், 50 லட்சம் ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரையிலான நடுத்தர வீடுகள் பிரிவிலும்; 1.50 முதல் 2 கோடி ரூபாய் வரையிலான நடுத்தர பிரீமியம் வீடுகள் பிரிவிலும், கூடுதல் கவனம் செலுத்த நிறுவனம் முடிவு செய்துஉள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.