டெஸ்லாவை அடுத்து 'ஸ்டார்லிங்' உரிமம் வழங்கும் பணிகள் துரிதம்
டெஸ்லாவை அடுத்து 'ஸ்டார்லிங்' உரிமம் வழங்கும் பணிகள் துரிதம்
ADDED : ஏப் 14, 2024 12:39 AM

புதுடில்லி:எலான் மஸ்க், இம்மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரது 'ஸ்டார்லிங்க்' நிறுவனத்துக்கான உரிமம் விண்ணப்ப வேலைகளை, தொலைத்தொடர்பு துறை துரிதப்படுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருகையின் போது பிரதமரை சந்திக்கும் எலான் மஸ்க், இந்தியாவில் டெஸ்லா, ஸ்டார்லிங்க் அறிமுகப்படுத்துவது உட்பட, கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய் முதல் 25,000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை துவங்குவதற்கு தேவையான உரிம விண்ணப்ப வேலைகளை, தொலைத்தொடர்பு துறை தற்போது துரிதப்படுத்தி உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவமான, ஸ்டார்லிங்க், செயற்கைகோள் வாயிலாக, அதிவிரைவு இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், இந்தியாவில் அதன் சேவைகளை துவங்கும் நோக்கில், கடந்த 2022 நவம்பரில், ஜி.எம்.பி.சி.எஸ்., எனும் உரிமத்துக்கு, விண்ணப்பித்து இருந்தது.
தற்போது எலான் மஸ்க்கின் வருகையையொட்டி, உத்தேச ஒப்புதல் ஆவணம் மற்றும் டிரையல் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றை தயாரிக்கும் வேலையில், தொலைத்தொடர்பு துறை ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உரிமத்துக்கான ஒப்புதல் பெற்ற பின், பல்வேறு இந்திய அதிகாரிகளின் ஒப்புதலையும் நிறுவனம் பெற வேண்டும். அதன்பிறகே, இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதன் சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்க முடியும்.

