சிறுதொழில் நிறுவனங்களுக்கு வலை வீசும் வடமாநிலங்கள்
சிறுதொழில் நிறுவனங்களுக்கு வலை வீசும் வடமாநிலங்கள்
ADDED : பிப் 14, 2025 11:55 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்முனைவோரை சந்தித்து, தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்குமாறும், பல்வேறு சலுகை வழங்குவதாகவும், பிற மாநில அரசுகள் அழைப்பு விடுத்து வருகின்றன.
இதுகுறித்து, எம்.எஸ்.எம்.இ., துறையினர் கூறியதாவது:
நாட்டின் மொத்த ஏற்றுமதியில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 40 சதவீதம்.
அதேசமயம், தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், அந்நிறுவனங்களுக்கு பங்கு, 45 சதவீதம் என, தேசிய அளவைவிட அதிகம் உள்ளது. பலவகை பொருட்களை தரமாக உற்பத்தி செய்வதே இதற்கு முக்கிய காரணம்.
ம.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வந்து, 'எங்கள் மாநிலத்தில் உதிரி பாகங்களை வழங்கக்கூடிய சிறிய நிறுவனங்கள் அதிகம் இல்லாததால், பெரிய நிறுவனங்கள் தொழில் துவங்க தயக்கம் காட்டுகின்றன.
'எங்கள் மாநிலத்தில் தொழில் துவங்கினால், குறைந்த விலையில் நிலம், முத்திரைத்தாள் கட்டணம், மின்சார கட்டணத்தில் விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்' என, கூறுகின்றனர்.
இதனால், அம்மாநிலங்களில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து, பல நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
எனவே, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதைத் தடுக்க, விரிவாக்க திட்டங்களுக்கும், புதிய தொழில்களுக்கும் சலுகை விலையில் மின்கட்டணம், தொழில்மனைகள் ஒதுக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.