ஒரகடம் மருத்துவ தொழில் பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம் அமைகிறது
ஒரகடம் மருத்துவ தொழில் பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம் அமைகிறது
ADDED : மார் 06, 2025 11:31 PM

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள மருத்துவ தொழில் பூங்காவில், 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழிற்கூடத்தை, தனியாருடன் இணைந்து, சிப்காட் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கு தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக மருத்துவமனைகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக நம் நாட்டிற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மருத்துவமனைக்கான பெரும்பாலான மருத்துவ சாதனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
எனவே, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவதை ஊக்குவிக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், 400 கோடி ரூபாய் செலவில், 350 ஏக்கரில் மருத்துவ சாதனங்கள் தொழில் பூங்காவை சிப்காட் நிறுவனம் அமைத்து வருகிறது.
நிறுவனங்கள் விரைந்து தொழில் துவங்க வசதியாக, தற்போது, மருத்துவ சாதன பூங்காவில், 18 ஏக்கரில், 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழிற்கூடத்தை சிப்காட் அமைக்க உள்ளது.
இதை, அரசு - தனியார் முறையில் அமைக்க, தகுதியான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
இந்த முறையில் தனியார் நிறுவனம் தொழிற்கூடம் அமைக்கும் இடத்தை சிப்காட் வழங்கும்.
அங்கு டெண்டரில் தேர்வாகும் தனியார் நிறுவனம் தன் சொந்த செலவில், தொழிற்கூடம் அமைத்து, தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும்.
தனியார் நிறுவனம், தயார் நிலை தொழிற்கூடத்தை அமைத்து, 45 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.
இதன் வாயிலாக சிப்காட்டிற்கு குத்தகை வருவாய், தனியார் நிறுவனத்தின் வருவாயின் பங்கு என, பல வகையில் வருவாய் கிடைக்கும்.