பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் உயிரிழந்தால் ரூ.50,000 காப்பீடு
பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் உயிரிழந்தால் ரூ.50,000 காப்பீடு
ADDED : மார் 05, 2025 11:56 PM

புதுடில்லி:சந்தாதாரர் ஆகி, ஓராண்டு பணியில் நீடிப்பதற்குள் உயிரிழக்க நேரிட்டால், குறைந்தபட்ச ஆயுள் காப்பீடு பலனாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என, இ.பி.எப்.ஓ., தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டிலும் பி.எப்., சேமிப்புக்கு 8.25 சதவீத வட்டி வழங்க முடிவெடுக்கப்பட்ட இ.பி.எப்.ஓ., கூட்டத்தில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்ற இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச ஆயுள் காப்பீடு தொகை குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஒருவர் பணியில் சேர்ந்து, பி.எப்., சந்தாதாரராகி ஓராண்டு நிறைவடைதற்குள் உயிரிழக்க நேரிட்டால், குறைந்தபட்ச ஆயுள் காப்பீடாக அவரது குடும்பத்துக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இதுபோல, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5,000 உயிரிழப்புகள் நேரிடும் நிலையில், குடும்பத்துக்கு காப்பீடு பலன் உதவும்.
அதேபோல, இ.டி.எல்.ஐ., திட்டத்தின்கீழ், பி.எப்., சந்தாவில் இடைநிறுத்தம் ஏற்பட்டால், காப்பீடு பலன் கிடைக்காது என்றிருந்தது.
இந்த விதி மாற்றப்பட்டு, அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை சந்தா செலுத்தாமல் இருந்தாலும், இறப்பு நேரிட்டால், தொழிலாளரின் குடும்பத்துக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். இதனால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 14,000 குடும்பங்கள் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, தொழிலாளர், நிறுவனம் மாறும்போது ஓரிரு நாள் இடைவெளி ஏற்பட்டாலும், அது சர்வீஸ் தொடர்ச்சியாக கருதப்படாமல், ஆயுள் காப்பீட்டு திட்ட பயன் கிடைக்காத சூழல் இருந்தது.