அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்களுக்கு செபி நோட்டீஸ்
அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்களுக்கு செபி நோட்டீஸ்
ADDED : மே 03, 2024 10:00 PM

புதுடில்லி:பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி 'ஷோகாஸ்' நோட்டீஸ் அனுப்பியதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தைக்கான தாக்கலில் தெரிவித்துள்ளன.
அதானி குழுமத்தைச் சேர்ந்த 'அதானி என்டர்பிரைசஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ், அதானி டோட்டல் காஸ், அதானி வில்மர், அதானி கிரீன் எனர்ஜி' ஆகிய ஏழு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனைகளில் விதிமீறல், சந்தை ஒழுங்குமுறை மீறல் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டு 'ஷோகாஸ்' நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளன.
கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான நிதிநிலை குறித்த முடிவுகளை, பங்கு சந்தைக்கு தெரிவிக்கும் போது இந்த தகவலை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2023 ஜனவரியில், அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
இதையடுத்து இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, செபி மேற்கண்ட ஆறு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த விசாரணை கடந்த நிதியாண்டின் இறுதி வரை தொடர்ந்ததால், இந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து, பங்கு சந்தை தாக்கலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், பங்கு பரிவர்த்தனை விதிமுறைகளை மீறியதாகவோ, விதிமுறைகளுக்கு இணங்காமலோ இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், மேலும், செபி அளித்த நோட்டீஸ்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளதாகவும், அதானி குழும நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.