ADDED : ஆக 27, 2024 03:10 AM

புதுடில்லி;'நாஸ்காம்' எனும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தேசிய சங்கத்தின் தலைவராக சிந்து கங்காதரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான 'சாப் லேப்ஸ்' நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும் சிந்து கங்காதரன், கடந்தாண்டு முதல், நாஸ்காமின் உலகளாவிய திறன் மையங்களுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்.
மேலும், 'சீமென்ஸ் இந்தியா, டைட்டன்' நிறுவனங்களின் இயக்குனர் குழு உறுப்பினராகவும்; இந்தியா - ஜெர்மனி வர்த்தக கூட்டமைப்பின் வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
நாஸ்காம் தலைவராக நியமிக்கப்பட்ட பின் பேசிய சிந்து கங்காதரன், “புதிய கண்டுபிடிப்புகளில் உலகளவில் இந்தியா முன்னிலை வகிப்பதில், நாஸ்காம் முக்கிய பங்காற்றிஉள்ளது.
“வலுவான பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்கள், கண்டுபிடிப்பு திறன்கள் மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட அதிக இளைஞர்கள் உள்ளிட்டவற்றுடன், பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த நிலையில் இந்தியா தற்போது உள்ளது,” என தெரிவித்தார்.