ADDED : மே 28, 2024 06:46 AM

புதுடில்லி : இந்தியாவில் நடப்பு கோடை காலத்தில் பயணங்கள், 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் மற்றும் விரும்தோம்பல் சேவைகளுக்கான தேவை, நடப்பு கோடை காலத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கோடையுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு கோடையில், பயணங்கள் 30 முதல் 40 சதவீதத்திற்கு அதிகரித்து உள்ளதாக, இந்திய உணவகங்கள் சங்க தலைவர் கச்ரூ தெரிவித்துள்ளார்.
தேர்தல் காரணமாக, நிறுவனங்களின் சந்திப்பு, ஆலோசனை கூட்டம், கண்காட்சி போன்றவை சற்று குறைந்து இருந்தாலும், உணவகங்களின் வர்த்தக நடவடிக்கை அதிகரித்து உள்ளது.
தேர்தலுக்கு பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டளிக்க விரும்பியதால், விமான பயணங்கள் அதிகப்படியான வளர்ச்சியை கண்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகம் பயணிக்கப்பட்ட இடங்களின் வரிசையில், குளிர்ந்த மலை பிரதேசங்கள் முதலிடத்தில் உள்ளன. அதன்படி, ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர், கேரளா மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு, மக்கள் அதிகம் பயணித்து உள்ளனர்.
இதேபோல், கடற்கரை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கான பயணங்களும் அதிகரித்துள்ளன. மிகவும் விரும்பப்படும் கடல்சார் பயண இடங்களில், கோவா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து வர்க்கலா, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய இடங்கள் உள்ளன.
தங்கள் மொத்த சுற்றுலா புக்கிங்கில், மலை பிரதேசங்கள் 47 சதவீதமாகவும், கடல்சார் பயண இடங்கள் 53 சதவீதமாகவும் உள்ளதாக, 'ஓயோ' நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் ஜூன் மாதத்தில், மலை பிரதேசங்களுக்கான பயணங்கள், கடலோர பயணங்களை விடவும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துஉள்ளது.
தங்கள் நிறுவனத்தின் குடும்ப பயணம், முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தனிநபர் பயணம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 'மேக் மை டிரிப்' தெரிவித்துள்ளது.