ADDED : மே 10, 2024 04:01 AM
புதுடில்லி: இந்தியாவில் அடுத்த இரண்டரை ஆண்டுகளில், 'டி100' வகை கார்பன் பைபர் தயாரிக்கப்படும் என, நிடிஆயோக் உறுப்பினர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
டி100 எனும் கார்பன் பைபர், ராணுவம், விமானம், சிவில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏவுகணைகள், ஹைட்ரஜன் சிலிண்டர்கள், புல்லட்ப்ரூப் ஜாக்கெட்டுகள் போன்றவற்றின் தயாரிப்பிலும், இது பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த பைபர்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு கட்டுபாடு உள்ளது. இவற்றை முக்கிய காரணங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்காத வகையில், வெளிநாடுகளின் உரிமை முறை உள்ளது.
எனவே, இந்த பைபர்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 'பாபா அணு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், மிஷ்ரா தாத்து நிகாம்' ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில், டி100 வகை கார்பன் பைபர் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட உள்ளது.
இறக்குமதி கட்டுபாடுகளில் இருந்து விடுபடுவதற்கும், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அடுத்த 2 அல்லது 2.5 ஆண்டுகளில், இது தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.